‘அப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம்’!.. SRH-ஐ துரத்தும் தோல்வி.. விரக்தியில் வார்னர் சொன்ன பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கு முழுக்க முழுக்க தானே காரணம் என ஹைதராபத் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இதில் பேர்ஸ்டோ 7 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவுடன் கூட்டணி அமைத்த வார்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் செல்லவில்லை என்றாலும், ரன்கள் அதிகமாக செல்லாமல் சென்னை அணி கட்டுப்படுத்தியது. இதனால் 17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அப்போது லுங்கி லிகிடி வீசிய 18-வது ஓவரில் வார்னர் (55 பந்துகளில் 57 ரன்கள்) ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, அதே ஓவரில் மனிஷ் பாண்டேவும் (46 பந்துகளில் 61 ரன்கள்) டு பிளசஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் கேதர் ஜாதவ் கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை ஹைதரபாத் அணி எடுத்தது. இதில் கேன் வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்களும், கேதர் ஜாதவ் 4 பந்துகளில் 12 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி, 18.3 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்களும் (12 பவுண்டரிகள்), டு பிளசிஸ் 56 ரன்களும் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தனர். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை ரஷிக் கான் 3 விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ‘இப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு முழு காரணத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். என் பேட்டிங் இந்த போட்டியில் சிறப்பாக இல்லை, மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டேன். அதுவே எங்களுக்கு பெரிய பாதகமாக அமைந்துட்டது. நான் அடித்த பந்துகள் எல்லாம் பீல்டர்களின் கைகளுக்கே சென்றதால் சற்று அதிர்ப்தி அடைந்தேன்.
அதேவேளையில் மனிஷ் பாண்டே சிறப்பாக விளையாடினார். கேன் வில்லிம்சனால்தான் மதிப்பிற்குரிய ஒரு ஸ்கோர் எங்கள் அணிக்கு கிடைத்தது. ஆனாலும் இந்த இந்த ரன்கள் வெற்றி பெற போதாது. நான் அடித்த 15 ஷாட்க்ள் பீல்டரின் கைகளுக்கு சென்றுவிட்டன. இதுபோல் நல்ல பந்துகளில் பவுண்டரி வராமல் இருக்கும்போது, அது நம் மன உறுதியை உடைக்கும். ஒரு பேட்ஸ்மேனால் ரன் அடிக்க முடியவில்லை என்ற எண்ணம் வந்துவிட்டால், அதிலிருந்து மீழ்வது கடினம்.
நாங்கள் 171 ரன்கள் அடித்திருந்தும், பவர் ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க தவறிவிட்டோம். இதுபோன்ற பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் விக்கெட் எடுக்காமல் விட்டால் வெற்றி பெறுவது கடினம் தான். சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர். இது ஒரு நல்ல பேட்டிங் மைதானமாக நாள் முழுவதும் இருந்தது. 171 ரன்கள் என்பது சேஸிங் செய்யக்கூடிய ஒரு இலக்கு தான். ஒரு பேட்ஸ்மேனாக நிறைய பந்துகளை நான் வீணடித்துவிட்டேன். தோல்விக்கு எனது பொறுமையான ஆட்டமே முழுக்க முழுக்க காரணம்’ என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.