‘அடுத்தடுத்து விலகும் வீரர்கள்’!.. ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா..? சவுரவ் கங்குலி முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருவதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் இந்தியாவில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 21 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமால் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றனர். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட் (Josh Hazlewood) விலகுவதாக தெரிவித்தார். நீண்ட நாட்களாக பயோ பபுளில் இருப்பதால் குடும்பத்துடன் சிறிதுகாலம் நேரம் செலவிட வேண்டும் என அவர் கூறினார்.
இதே காரணத்தை கூறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனும் (Liam Livingstone) ஐபிஎல் தொடரின் பாதியிலேயே விலகினார். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் விளையாடிய மற்றொரு இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) காயம் காரணமாக நாடு திரும்பினார்.
இவர்களை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா (Adam Zampa) மற்றும் கேன் ரிச்சர்ட்சன் (Kane Richardson) ஆகிய இருவரும் நாடு திரும்புவதாக சமீபத்தில் தெரிவித்தனர்.
இதனிடையே டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் அஸ்வின், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக நேற்று தெரிவித்தார். கடுமையாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தற்போது குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க விரும்புவதாக அஸ்வின் கூறினார். அடுத்தடுத்து வீரர்கள் விலகி வரும் நிலையில் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெறுமா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இதுதொடர்பாக Sportstar சேனலுக்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ தலைவர் சவரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர்கள் நடைபெறும். அதனால் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை ஊக்கப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். குடும்பம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலக விரும்பினால், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக உள்ளோம்’ என கங்குலி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
