மும்பைக்கு வாய்ப்பில்லை.. இந்த தடவை ‘கோப்பை’ அவங்களுக்குதான்.. அடித்து கூறும் முன்னாள் கேப்டன்.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இரண்டாம் கட்ட ஐபிஎல் (IPL) போட்டிகள் நடைபெறுகிறது. நாளை (19.09.2021) முதல் போட்டிகள் தொடங்க உள்ளன. இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதுகின்றன. நாளை துபாய் மைதானத்தில் நடைபெற இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள அணி குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen) கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி எப்போதும் ஆரம்பத்தில் சொதப்பி, பின்னர் மீண்டு சிறப்பாக விளையாடும். இதுதான் கடந்தகால ஐபிஎல் தொடரில் நடந்த வரலாறு. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் பாதி ஆட்டத்தை கடந்துவிட்டோம். மும்பை அணிக்கு இன்னும் 6 போட்டிகளே மீதம் உள்ளன.
எப்போதும் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறும் மும்பை, இந்தமுறையும் அப்படியே செய்துள்ளது. ஆனால் மீண்டு வருவதற்கு போதுமான போட்டிகள் அந்த அணிக்கு இல்லை. இன்னும் 3 போட்டிகளில் தோற்றாலே எல்லாம் முடிந்துவிடும். மும்பை அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு எதிரான முதல் போட்டியின், முதல் பந்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த வேண்டும். பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என இருந்தால், பின்னர் ஒன்றும் செய்யமுடியாது.
அதேசமயம் கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறையும் அப்படியே விளையாடும் என பலரும் கணித்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் சென்னை அணி மிகச்சிறப்பாக விளையாடியுள்ளது. டு பிளசிஸ், மொயின் அலி, சாம் கர்ரன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அபாரமாக விளையாடினர்.
ஆனாலும் இந்த நான்கு மாத இடைவெளி காரணமாக, சென்னை அணியின் சீனியர் வீரர்கள் அதே ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அதே ஃபார்முடன் விளையாடினால், சென்னை அணிக்குதான் இந்த முறை கோப்பை என்று சொல்லுவேன்’ என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 60 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில், இதுவரை 29 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 7 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் சென்னை அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும், மும்பை அணி 4 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.