சிஎஸ்கே ‘தோல்வியை’ தமிழ்நாட்டில் ‘பட்டாசு’ வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்.. மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட ‘வைரல்’ வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்ததற்கு தமிழகத்தில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டி நேற்று (23.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சாம் குர்ரன் மட்டுமே 52 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இதனை அடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.2 ஓவர்களில் 116 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. இதில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக் 37 பந்துகளில் 46 ரன்களும், இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்களும் குவித்தனர்.
மும்பை அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் கனவு சிதைந்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் சோகத்துக்கு உள்ளானார்கள். மேலும் தோனி கூறியது போல சென்னை அணியில் இளம் வீரர்களுக்கு 'ஸ்பார்க்' இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தனர். அதற்கு காரணம் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக, அடுத்து களமிறங்கிய தமிழக இளம்வீரர் ஜெகதீசன், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறியதுதான்.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சிலர் சிஎஸ்கே தோற்றதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
Loving the enthusiasm and the support but we'd still want you to stay indoors and celebrate from home 💙 https://t.co/9ib0X2xPBW
— Mumbai Indians (@mipaltan) October 23, 2020
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, ‘உங்களது உற்சாகத்தையும், ஆதரவையும் நேசிக்கிறோம், ஆனால் இதனை நீங்கள் வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.