ஏன் 19-வது ஓவரை சிவம் துபேவுக்கு கொடுத்தீங்க..? எல்லாரும் கேட்கும் ஒரே கேள்வி.. சிஎஸ்கே கோச் சொன்ன காரணம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 19-வது ஓவரை சிவம் துபேவுக்கு கொடுத்ததற்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைய அந்த அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்கு 19-வது ஓவரை வீச கொடுத்ததே காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில், போட்டியின் கடைசி 12 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் லக்னோவில் இருந்தது. அப்போது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்கு 19-வது ஓவரை கேப்டன் ஜடேஜா கொடுத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அதற்கு காரணம் அப்போட்டியில் அதற்கு முன்புவரை ஒரு ஓவர் கூட சிவம் துபே வீசவில்லை. அதனால் போட்டியின் முக்கியமான கட்டத்தில் அவரை பந்துவீச அழைத்தது ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டது. அவர் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் சென்றது. இதுதான் போட்டியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘அப்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொடுக்கும் எண்ணம் இல்லை. ஏனென்றால் மைதானம் நயாகரா நீர்வீழ்ச்சி போல அவ்வளவு ஈரமாக இருந்தது. அதனால்தான் சிவம் துபேவை பந்துவீச அழைத்தோம். அதோடு லக்னோ அணியும் சிறப்பாகவே விளையாடினர்’ என ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
