எங்க நாட்டுல ஐபிஎல் போட்டியை நடத்துங்க.. செலவு ரொம்ப கம்மிதான்.. சத்தமில்லாமல் பிசிசிஐக்கு அழைப்பு விடுத்த நாடு..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரை குறைந்த விலையில் நடத்திக் கொள்ளலாம் என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலம்
நடப்பு ஆண்டுக்கான் 15-வது ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருந்தார். அதனால் ஐபிஎல் தொடருக்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் பிப்ரவரி மாதம் மெகா ஏலம் நடைபெற்று விட்டால், உடனடியாக போட்டி அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் அதிகமாகும் கொரோனா பாதிப்பு காரணமாக போட்டிகளை இங்கு நடத்துவதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. ஆனால் அங்கு போட்டிகளை நடத்துவதில் அதிகமாக செலவாகுவதால், இம்முறை இந்தியாவிலேயே போட்டியை நடத்த பிசிசிஐ ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தென் ஆப்பிரிக்கா அழைப்பு
இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது.
பிசிசிஐக்கு நன்றி
இந்த தொடர் சிறப்பாக நடந்து முடிந்ததால், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்தது. அப்போது நடைபெற்ற கூட்டத்தில், ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ளுங்கள் என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செலவு குறைவு
ஐக்கிய அரபு அமீரகத்தை விட இங்கு போட்டிகளை நடத்தினால் செலவு குறைவு என்று பிசிசிஐ அதிகாரிகளிடம் அந்நாட்டு நிர்வாகம் கூறியதாக சொல்லப்படுகிறது. குறைந்த விமான பயணம், சிறிய இடைவெளியில் உள்ள மைதானங்கள் என பல விஷயங்களை எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது. அதனால் இதுதொடர்பாக பிசிசிசி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
