விராட் கோலி விஷயத்தில் பிசிசிஐ எடுத்த முடிவு.. இப்டி எல்லாம் பண்ணா தோக்க தான் செய்வீங்க.. கொதித்து எழுந்த முன்னாள் பாக். வீரர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்ததன் காரணம் என்ன என்பது பற்றி, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், ஒரு போட்டியைக் கூட வெல்லாத இந்திய அணி, வொயிட் வாஷ் செய்யப்பட்டது.
முன்னதாக, டெஸ்ட் தொடரையும் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்த நிலையில், அந்த அணி மீது கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டது. இந்திய அணியின் ஆடும் லெவன், மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை, ராகுலின் கேப்டன்சி உள்ளிட்ட பலவும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.
கடும் விமர்சனம்
கிரிக்கெட் உலகில் பலம் வாய்ந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை இழந்திருந்தாலும், அவர்களின் சிறப்பான ஆட்டம் எங்கும் வெளிப்படுத்தவில்லை என்றும் பலர் விமர்சனம் செய்தனர். இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை பல ஆண்டுகளாக சிறப்பாக இல்லாத போதும், அதில் மாற்றம் எதையும் ஏற்படுத்தாமல் ஆடி வருவதும் கடும் விமர்சனத்துக்குள் ஆனது.
விலகிய கோலி
இது எல்லாம் போக, இன்னொரு பக்கம், கோலி கேப்டனாக இல்லாமல் போனதும், ஒரு நாள் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த முடியமால் போனதன் காரணமாக இருக்கலாம் என்றும் பலர் கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை தொடருக்கு பிறகு, அதன் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார்.
ரசிகர்கள் ஏமாற்றம்
தொடர்ந்து, டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என இரண்டிற்கும் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமித்திருந்தது கடும் விமர்சனத்தை உண்டு பண்ணியது. இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த மறுநாளே, அதன் கேப்டன் பதவியில் இருந்தும், கோலி திடீரென விலகியது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மூன்று வடிவிலான கேப்டன் பதவியில் இருந்தும் கோலி விலகியது, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
தோல்விக்கான காரணம்
ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ விராட் கோலியை விலக்கியது, அவரது பேட்டிங்கில் சரிவர கவனம் செலுத்த முடியாமல் போனது உள்ளிட்ட பல நெருக்கடியால் தான், கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகும் முடிவை எடுத்திருப்பார் என பலரும் தெரிவித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப், இந்திய அணியின் தோல்வி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மோசமான உதாரணம்
'இந்திய அணியை முன்னணி வீரர் ஒருவர், சுமார் 10 ஆண்டுகளாக தலைமை தாங்கி வந்தார். அணியின் ஆணிவேர் வரை அவரது தாக்கம், ஆழமாக பதிந்துள்ளன. அப்படிப்பட்ட ஒருவரை, கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ விலக்கியது. இது ஒரு மோசமான உதாரணம்.
இந்திய அணிக்கு தான் பிரச்சனை
கோலியை கேப்டன் பதவியில் இருந்து மாற்றுவது யாருடைய ஆலோசனையாக இருந்தாலும் சரி, அந்த முடிவு கொஞ்சம் கூட எடுபடவில்லை. அது தவறான முடிவாகவே போனதால் தான், ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து, திரும்ப இந்திய அணிக்கே வினையாக வந்து முடிந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
