'விராட் கோலியை வெறுக்கறது தான்’... ‘எங்களுக்கு பிடிக்கும்’... ‘ஆனாலும், அவர்கிட்ட இருக்கிற இந்த திறமைதான்’... ‘ஆஸ்திரேலிய கேப்டன் வெளிப்படையாக சொன்ன பதில்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து, ஆஸ்திரேலிய மக்கள் இருவிதமான கருத்துக்களை வைத்துள்ளதாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பைன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையில் இந்திய அணியினர் அங்கு சென்றுள்ளனர். வரும் 27-ம் தேதி ஒருநாள் தொடரும், அதைத் தொடர்ந்து டி20 தொடரும், டிசம்பர் 17-ம் தேதி அடியெல்டில் டெஸ்ட் போட்டித் தொடரும் தொடங்குகிறது.
இந்த தொடரில் அடிலெய்டில் நடக்கும் பகலிரவு டெஸ்டில் மட்டும் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அடுத்த 3 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவிற்கு முதல் குழந்தை பிறக்கும் காலம் ஜனவரியில் இருப்பதால் அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, விராட் கோலி கேட்டுக்கொண்டதால், பிசிசிஐ விடுப்பு அளித்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பைன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, ‘என்னைப் பொருத்தவரை விராட் கோலி மற்றொரு அணி வீரர் என்பதால் எனக்கு எந்த கவலையும் இல்லை. உண்மையில் எனக்கு கோலியுடன் நியாயமான நட்புறவு ஏதும் இல்லை. டாஸ் போடும்போது அவரைக் காண்கிறேன். அதன்பின் அவருக்கு எதிராக ஆடுகிறேன் அவ்வளவுதான்.
வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆஸ்திரேலிய மக்களில் ஒரு பிரிவினர் விராட் கோலியை வெறுப்பதை விருப்பமாக வைத்துள்ளார்கள். ஆனால், அதேசமயம், அவரின் பேட்டிங் செய்வதை ரசிகர்களாக பார்ப்பது பிடிக்கும். எனினும், அவர் அதிகமான ரன்கள் அடிப்பதைப் பார்க்க பிடிக்காது.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டி எப்போதுமே மிகவும் பரபரப்பானதாக இருக்கும். அதிலும் விராட் கோலி கடும் சவாலுக்குரிய வீரர். பல சந்தர்ப்பங்களில் இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் அவரும் கேப்டன், நானும் கேப்டன் என்பதால் எல்லை மீறியதில்லை.
உலகில் தலைசிறந்த வீரர் களத்தில் விளையாடும் போது நமக்கு எப்போதும் பதற்றம் இருக்கும். அவரை ஆட்டமிழக்கச் செய்யவும் போராடுவோம். இதேபோல் இங்கிலாந்தின் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் இருவரும் களத்தில் விளையாடும் போது இதுபோன்று காட்டமான வாக்குவாதம் வரும்.
இந்தியா, ஆஸ்திரேலியத் தொடர் மிகவும் நேர்மையானதாக இருக்கும் என்பதால் மிகவும் எதிர்பார்க்கிறேன். கடந்த முறை எங்களை ஆஸ்திரேலியாவில் வைத்து தோற்கடித்தார்கள். ஆனால், இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அனைத்து நேரங்களிலும் கட்டமைக்கப்படுவதாக நினைக்கிறேன்’ என்று பைன் தெரிவித்தார்.
கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியப் பயணம் செய்து டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச்சாதனை படைத்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன், கோலி இடையே வாக்குவாதம், மோதல் பல நேரங்களில் ஏற்பட்டது. அப்போதெல்லாம் நடுவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.