'இன்ஸ்டாகிராமில ஒரு போட்டோ போட்டது குத்தமா?.. வளைச்சு வளைச்சு புடிக்கிறாங்களே!'.. அதிகாரிகள் பல நாள் திட்டம்!.. சிக்கிய க்ருணால் பாண்டியா!.. பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீபத்தில் 2020 ஐபிஎல் தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் க்ருனால் பாண்டியா வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் சிக்கியது எப்படி என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை வைத்து அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான், துபாயில் இருந்து வந்தவரை மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்களை விட கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து, அவரது உடைமைகளை ஆராய்ந்து அதிக விலை மதிப்புமிக்க வாட்ச்களை எடுத்துள்ளனர். அவரிடம் நீண்ட நேரம் விசாரணையும் நடந்துள்ளது.
2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ரன்னை அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தவர் க்ருனால் பாண்டியா.
அவரது சகோதரர் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா சென்றனர்.
க்ருனால் பாண்டியா மற்றும் பிற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் மும்பைக்கு திரும்பினர்.
ஐபிஎல் தொடரில் ஆடும் போது க்ருனால் பாண்டியா ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலை உயர்ந்த வாட்ச்களை அணிந்து புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்து வந்துள்ளார். அந்த வெளிநாட்டு வாட்ச்களின் மதிப்பு பல லட்சங்கள் ஆகும்.
அதை இந்தியாவில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். எப்படியும் அந்த வாட்ச்கள் துபாய் அல்லது வேறு நாட்டில் இருந்து வாங்கப்பட்டதாக இருக்கலாம் என்பதை ஊகித்து அவர் இந்தியா வரும் வரை காத்திருந்தனர்.
சரியாக க்ருனால் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் இறங்கிய உடன் அவரது உடைமைகளை பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது ரோலக்ஸ், ஒமேகா, வைரம் பதித்த அடேமார்ஸ் பிகேட் உள்ளிட்ட வாட்சகளை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மொத்தம் நான்கு வாட்ச்கள் மற்றும் சில நகைகளை கைப்பற்றியதாகவும், அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அது குறித்து க்ருனால் பாண்டியாவிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. அவரது விலை உயர்ந்த வாட்ச்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்த பின் அவரை விடுவித்துள்ளனர்.
அவர் அந்த பொருட்களை மீட்க வேண்டும் என்றால் கஸ்டம்ஸ் தொகையாக சுமார் 38 லட்சமும், கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் மறைத்து பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றதால் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த விவகாரத்தால் க்ருனால் பாண்டியாவுக்கு எப்படி அந்த வாட்ச்கள் துபாயில் கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐபிஎல்-இல் பங்கேற்ற வீரர்கள் வெளி உலகத்துடன் நேரடி தொடர்பு இன்றி இருந்த நிலையில், அவர் எப்படி வாட்ச்களை பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஆசைக்காக புகைப்படம் போடும் நபர்களுக்கு இந்த விவகாரம் அதிர்ச்சி அளிப்பதாகவும் அமைந்துள்ளது. அரசு அதிகாரிகள் சமூக வலைதள பக்கங்களை உற்று கவனித்து வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும்.

மற்ற செய்திகள்
