"நேத்து அவருகிட்ட பேசுறப்பவே".. சதமடிப்பதற்கு ஒரு நாள் முன் ABD கிட்ட பேசுன கோலி.. வைரலாகும் ட்வீட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆசிய கோப்பை தொடரில், சூப்பர் ஃபோர்ஸ் சுற்றில் தங்களின் கடைசி போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இந்திய அணி இழந்து விட்டது.
அப்படி இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அடித்த சதம் குறித்த செய்தி தான், தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, சுமார் 1000 நாட்கள் கழித்து, 84 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் சதம் ஒன்றை அடித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கு முன்பாகவே கோலி பேட்டிங் மீது கடும் விமர்சனம் எழுந்து வந்தது. ஆனால், ஆசிய கோப்பையில் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி, தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 122 ரன்கள் எடுத்து தான் 'King' என்பதை நிரூபித்துள்ளார். மேலும், இவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், விராட் கோலியின் நெருங்கிய நண்பருமான ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலி குறித்து கூறிய பதிவு, அதிகம் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணிக்காக விராட் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இணைந்து ஆட ஆரம்பித்தது முதல் சிறந்த நண்பர்களாக விளங்கி வருகின்றனர்.
அப்படி இருக்கையில், கோலி தனது 71 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளதால் இது பற்றியும் டிவில்லியர்ஸ் செய்த ட்வீட் ஒன்று, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி, "மீண்டும் நடனமாடுகிறேன். என்ன ஒரு அசத்தலான ஆட்டம்" என ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, மற்றொரு ட்வீட்டில், "நேற்று அவரிடம் பேசிய போதே ஏதோ நடக்க போகிறது என்ற ஒரு உணர்வு இருந்தது. நன்றாக ஆடினாய் நண்பா" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
