"அட நம்ம ஊரு மாப்பிள்ளை.." முகத்துல குங்குமம், மஞ்சளோட நம்ம ஊரு ஆளாக மாறிய 'RCB' வீரர்.. வாழ்த்திய 'CSK'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம், ஐபிஎல் தொடரில் கலக்கிய மேக்ஸ்வெல்லை கடந்த சீசனில் பெங்களுர் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. தொடர்ந்து, இந்த சீசனுக்காகவும் தங்களுடைய அணியில் அவரை தக்க வைத்துக் கொண்டது.
இதனையடுத்து, நேற்று நடைபெற்ற போட்டியில் களமிறங்காத மேக்ஸ்வெல், முதல் மூன்று போட்டியில் களமிறங்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்திய வம்சாவளி பெண்ணுடன் காதல்
அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் முதல் சில ஐபிஎல் போட்டிகளைத் தவற விடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம், மேக்ஸ்வெல்லின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றிருந்து. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார் மேக்ஸ்வெல். கடந்த 2020 ஆம் ஆண்டு, இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றிருந்தது. ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக, மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
வைரலான தமிழ் பத்திரிக்கை
இந்நிலையில், மேக்ஸ்வெல்லின் திருமணம், மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக காதலர்கள் இருவரும் தெரிவித்திருந்தனர். அது மட்டுமில்லாமல், மேக்ஸ்வெல் - வினி திருமணத்தின் தமிழ் பத்திரிக்கையும் வெளியாகி, அதிகம் வைரலாகி இருந்தது. இதனிடையே, அவர்கள் தங்களின் திருமணத்தினை கிறிஸ்தவ முறைப்படி, மோதிரங்களை மாற்றி, கடந்த 18 ஆம் தேதியன்று நடத்தி இருந்தனர்.
முகத்தில் மஞ்சள், குங்குமம்
இந்த புகைப்படத்தினை மேக்ஸ்வெல்லும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது மட்டுமில்லாமல், ஒரு வாரம் நடந்த திருமண நிகழ்வின் புகைப்படங்களையும் மேக்ஸ்வெல் ஏற்கனவே பகிர்ந்து இருந்தார். இதில், இந்திய முறைப்படி நடந்த நிகழ்வு ஒன்றில், முகத்தில் சந்தானம், குங்குமம் மற்றும் மஞ்சளுடன் மனைவி வினியுடன், இந்திய பாரம்பரிய உடையில் இருக்கிறார் மேக்ஸ்வெல்.
சென்னை மாப்பிள்ளை மேக்ஸ்வெல்
இந்த புகைப்படத்தினை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, "சென்னை மாப்பிள்ளை ஆன மேக்ஸ்வெல். திருமண வாழ்த்துக்கள்!. உங்களின் புதிய பார்ட்னர்ஷிப்பிற்கு 'Maximum' விசில்கள்" என தங்களின் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது. சென்னை மாப்பிள்ளை என மேக்ஸ்வெல்லை, சிஎஸ்கே குறிப்பிட்டுள்ள ட்வீட்கள், தற்போது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.