“நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன்”.. RCB தோல்விக்கு காரணம் இதுதான்.. கேப்டன் டு பிளசிஸ் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 2-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளசிஸ் 88 ரன்களும், விராட் கோலி 41 ரன்களும், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் மற்றும் பானுகா ராஜபக்ச ஆகியோர் தலா 43 ரன்களும், மயங்க் அகர்வால் 32 ரன்களும் எடுத்தனர். மேலும் 7-வது வீரராக களமிறங்கிய ஒடியன் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ், ‘இந்த போட்டி மிகவும் அருமையாக இருந்தது. சிறு வித்தியாசத்தில்தான் வெற்றியை தவறவிட்டோம். ஆரம்பத்திலும், மிடில் ஆர்டரிலும் நன்றாக பவுலிங் செய்தோம். ஆனால் கடைசி நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பவுலர்களுக்கு கடினமாக இருந்தது. கேட்ச்கள் தான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். அதில்தான் நாங்கள் தவறவிட்டோம். ஒடியன் ஸ்மித் எப்படி பேட்டிங் செய்வார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆரம்பத்திலேயே அவர் கொடுத்த கேட்சை தவறவிட்டு பெரிய தவறு செய்து விட்டோம்’ என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய டு பிளசிஸ், ‘நான் சோர்ந்து போய்விட்டேன். ஒவ்வொரு பந்தையும் தடுக்க டைவ் அடித்து, அடித்து கை முட்டி பகுதி ஓய்ந்து விட்டன. நல்லவேளை காயம் ஏதும் ஏற்படவில்லை’ என சிரித்துக்கொண்டே டு பிளசிஸ் கூறினார். ஒடியன் ஸ்மித் கேட்சை தவறவிட்டது, ரன் அவுட் போன்ற பல முக்கிய நேரங்களில் சொதப்பியதுதான் பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
