‘வாரத்துல 4 நாள்தான் வேலை செய்யணும்’.. ‘அதுவும் 6 மணி நேரம்தான்!’.. பிரதமரின் அதிரடி வியூகம்!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்By Siva Sankar | Jan 01, 2020 11:37 AM
உலகின் இளைய பிரதமரும், பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமருமான 34 வயதேயான சன்னா மரின், கடந்த 6-ஆம் தேதி பின்லாந்து பிரதமராக பதவியேற்றார்.
பதவியேற்றதும் முதல் கோரிக்கையாக வாரத்தில் வேலை நாட்கள் 4 ஆகவும், அலுவலக நேரம் 6 மணி நேரமாகவும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பின்லாந்தில் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளாகவும், வேலை நேரம் 8 மணி நேரமாகவும் இருந்துவரும் நிலையில், 4 நாட்களாக வேலை நாட்களை குறைப்பதற்கான சோதனை காலத்திற்கு அனுமதி கேட்டு கோரியுள்ளார்.
முன்னதாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகப் பணியாற்றியபோது, மக்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள், பொழுதுபோக்குகள் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட வாழ்க்கையின் மற்ற அம்சங்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதை தீர்க்கமாக உரைத்தவர். பின்லாந்தின் அண்டை நாடான ஸ்வீடனில் இதே வேலைமுறைதான் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் டொயோட்டா நிறுவனம் தனது ஊழியர்களின் வேலை நேரத்தையும், வேலை நாட்களையும் குறைத்ததால், ஊழியர்களின் மகிழ்ச்சியால் உற்பத்தியில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிந்தது. இதனால் இந்த மாற்றத்தை அந்நிறுவனம் பாசிட்டிவாகக் கருதியது. இதனால்தான் சன்னா இப்படியானதொரு மாற்றத்தை தன் நாட்டிலும் கோருகிறார்.