அந்த மனசு தான் சார் கடவுள்.. ரயில் டிராக்கில் நடந்த திக்திக் நிமிடங்கள்... ஹீரோ மாதிரி வந்த நபர்..
முகப்பு > செய்திகள் > கதைகள்தன்னுடைய உயிரைப் போலவே பிற உயிர்களையும் மதிக்க வேண்டும் என்ற வாசகத்தை சொல்லாத மதம் இல்லை. பேரிடரின் போதோ, விபத்தின் போதோ உதவி தேவைப்படுபவர்களுக்காக ஓடிச் செல்லும் ஒவ்வொரு நபரும் அத்தகையவர்களே. அவர்களில் ஒருவர் தான் முகமது மெஹ்பூப்.
பெற்றோருடன் சென்று கொண்டிருந்த போது ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுமியை அங்கே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஓடிச் சென்று காப்பாற்றிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அனைவராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் வசித்து வருபவர் முகமது மெஹ்பூப். தச்சராக பணிபுரிந்துவரும் இவர் பிப்ரவரி 5 அன்று தன்னுடைய பணியகம் இருக்கும் இடமான பார்கேடி பகுதிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது, தண்டவாளத்தில் சரக்கு ரயில் வருவதை பார்த்த முகமது, சற்று தூரத்தில் கூச்சல் கேட்பதையும் கேட்டிருக்கிறார்.
தண்டவாளத்தில் சிறுமி
ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே தனது பெற்றோருடன் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்திருக்கிறார். அந்த நேரம் பார்த்து, சரக்கு ரயில் ஒன்று வரவே அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பினர். விஷயத்தை உணர்ந்த முகமது உடனடியாக ஓடிச் சென்று சிறுமியை காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.
ரயில் மிகவும் நெருங்கிவிட்டதால் துரிதமாக யோசித்த முகமது சிறுமியை கீழே குனிந்து இருக்குமாறு அவரை கீழே அழுத்தி பிடித்திருக்கிறார். அச்சத்தில் இருந்த சிறுமியின் கைகைகளை பிடித்துக்கொண்டு ரயில் முழுவதுமாக கடக்கும் வரையில் தண்டவாளத்திற்கு கீழே இருந்திருக்கிறார்.
ரயிலின் கீழே சிக்கிய சிறுமியை தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாதது ஓடிச் சென்று காப்பாற்றிய முகமதுவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 37 வயதான முகமது மெஹபூப் தன்னுடைய கருணை உள்ளத்தின் காரணமாக அப்பகுதி மக்களால் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறார்.