#BREAKING: தடம் புரண்ட கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் - மீட்புப் பணிகள் தீவிரம்..! முழு தகவல்
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (வியாழன்) மாலை 5 மணியளவில் தோமோஹானி அருகே கவுகாத்தி - பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயிலின் (15633) 12 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 3 பயணிகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் மேலும் பலர் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. நியூ டோமோஹானி ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. மீட்புப் பணிகளில் எரிவாயு கட்டர்கள் பயன்படுத்தப்படுவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் தடம் புரண்டதாக தகவல்கள் கூறப்பட்டாலும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள நிலையில், பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இடிபாடுகளுக்கிடையே மக்கள்
கவுகாத்தி - பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 கோச்களும் தடம் புரண்டதால் அதில் பயணித்த மக்களின் நிலை என்ன? என்பது குறித்து அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய அங்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் இடிபாடுகளில் இருந்து காயமடைந்தோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
1100 பயணிகள்
இன்று தடம்புரண்ட கவுகாத்தி - பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1100 பயணிகள் இருந்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த மக்களை மொய்னாகுறி -யில் உள்ள மருத்துவமனைக்கு பேரிடர் மீட்புப்படை வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வருகிறார்கள்.
மேலும் இதுகுறித்து உதவிபெற ஹெல்ப்-லைன் நம்பரையும் (8134054999) ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து பிரதமர் மோடியுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விபத்து செய்தி வெளியானதும் கூட்டத்திலிருந்து வெளியேறி, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.