‘ஒருவரின் ஆடை மீது தொட்டு பாலியல் தொல்லை அளிப்பது’.. ‘போக்சோ சட்டத்தின் கீழ் வராது!’ - மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிறார் பாலியல் விவகாரங்கள் குறித்து மும்பை உயர்நீதிமன்றம் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளது.
சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிரான, பாதுகாப்பு சட்டமாக 'போக்சோ' (POCSO - Protection of Children from Sexual Offences Act) சட்டம் விளங்குகிறது. அதன்படி சிறார் மீதான வன்கொடுமைக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சிறார்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டும் இந்த சட்டம் நிலவுகிறது.
2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த போக்சோ சட்டம் மூலம் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவதால் கைது செய்யப் படுபவர்கள் தொடர்பான வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்க வேண்டும். இந்நிலையில் தான் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச், சிறார் பாலியல் வழக்கு ஒன்றை விசாரித்தபோது இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “ஒருவரிடம் அவரது விருப்பமின்றி பாலியல் அத்துமீறலை செய்வதை Groping என்று சொல்வார்கள். அதே சமயம் ஒருவர் அணிந்துள்ள ஆடைக்கு மேல் தொட்டு ஒருவருக்கு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது என்றும், அது துன்புறுத்தல் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனினும், அது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வராது!” என்று அந்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.