ஒடிசாவை உலுக்கி எடுத்த ஒற்றை காட்டு யானை... அண்ணனின் அட்டகாசத்தால் 600 ஸ்கூல்ஸ் லீவு... கடும் போராட்டத்திற்குப் பின் மடக்கிப் பிடித்த வனத்துறை...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 30, 2020 02:31 PM

ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்திய ஒற்றை காட்டு யானையை அம்மாநில வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Wild Elephant Injecting and caught by odisa forest department

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று சுற்றி வந்தது. அருகில் இருக்கும் காடுகளில் இருந்து நகருக்குள் வந்த இந்த காட்டு யானையை வனத்துறையினர் பல முறை காட்டுக்குள் விரட்டியுள்ளனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் நகருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. சுமார் 10 வயதுடைய அந்தக் காட்டு யானை அண்மையில் கொரி பகுதிக்குள் சென்றது.

அப்போது அந்த யானை இரண்டு முதியோர்களை மிதித்துக் கொன்றது.

இதனால் அச்சமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அந்த யானையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஒடிசாவில் யானை மனிதன் மோதல் வழக்கமானது என்றாலும் இம்முறை இந்தச் சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இதனால் காட்டு யானைக்கு பயந்து, கடந்த வாரத்தில் சுமார் 600 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

ஒடிசா வரலாற்றில் முதல் முறையாக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், யானைக்கு பயந்தும் ஒரே நாளில் இத்தனை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது இதுவே முதல் முறை. மொத்தமாக அந்த யானை இதுவரை 4 பேரை கொன்றதால் யானையை பிடிக்கக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறையினரின் கடும் முயற்சிக்கு பின்பு ஒற்றைக் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதனையடுத்து அந்தக் காட்டு யானையை முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : #ODISA #WILD ELEPHANT #CAUGHT #FOREST DEPARTMENT