"குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவங்க 3 வாரத்துக்கு இதை மட்டும் செஞ்சுடாதீங்க".. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வார காலத்திற்கு தங்களுடைய வளர்ப்பு பிராணிகளுக்கு அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது உலக சுகாதர மையம்.

குரங்கு அம்மை
வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இருப்பினும் இதில் காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தான் மிகுந்த ஆபத்தானதாக கருதப்பட்டது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவை தாண்டி ஐரோப்பியாவிலும் பரவ துவங்கியுள்ளது இந்த குரங்கு அம்மை. தற்போது வரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு வெளிநாட்டு பயணிக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள்
குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
குவாரன்டைன் தேவை
குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது ஐரோப்பிய பாதுகாப்பு முகமை. குறிப்பாக நோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்ளுடைய பொருட்களுக்கு அருகே செல்லப்பிராணிகள் சென்றிருந்தால் கண்டிப்பாக அவை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு 21 நாட்களுக்கு கண்காணிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும், இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்," குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்கள் தங்களது செல்லப்பிராணிகளிடம் இருந்து 21 நாட்கள் விலகி இருத்தல் வேண்டும். அடிக்கடி நோயாளிகள் கைகளை கழுவ வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ப்பு பிராணிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால், அது நோய் பரவலை அதிகமாக்கும் அபாயம் இருப்பதாலேயே இந்த அறிவுரையை வழங்கியிருப்பதாக ஐரோப்பிய பாதுகாப்பு முகமையை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
