"போனது பார்வை மட்டும் தான்.. என்னோட நம்பிக்கை இல்ல".. CBSE தேர்வில் சாதனை படைச்ச பார்வை மாற்றுத்திறனாளி மாணவி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாCBSE தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர்.
Also Read | CBSE தேர்வு முடிவுகள்: எல்லா பாடத்துலயும் செண்டம்.. இந்தியாவை திரும்பி பார்க்க வச்ச 2 மாணவிகள்..!
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் நாடுமுழுவதும் நடைபெற்று வந்த வேளையில் கடந்த 22 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாகும். 98.83% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் பிராந்தியம் முதல் இடத்தையும், 98.16% விகிதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
முதலிடம்
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான முடிவும் அதே நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கேரளாவை சேர்ந்த ஹன்னா ஆலிஸ் சைமன் என்னும் மாணவி முதலிடம் பிடித்திருக்கிறார். இவர் 500க்கு 496 மதிப்பெண்களை பெற்று அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஹன்னா தனது பெற்றோர் தான் தனது இந்த வெற்றிக்கு காரணம் என கூறியிருக்கிறார். "Microphthalmia" என்னும் குறைப்பாட்டினால் பார்வையை இழந்த ஹன்னாவுடன் சேர்த்து சைமன் மேத்யூஸ் - லிஜோ தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். பார்வை இல்லாத குறை தனது மகளுக்கு வரக்கூடாது என்பதற்காக வழக்கமான பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கின்றனர் ஹன்னாவின் பெற்றோர்.
முயற்சி
இதுகுறித்து பேசிய ஹன்னா,"என்னுடைய பெற்றோர் என்னை சகஜமாகவே நடத்தினர். என்னை எப்போதும் தனியாக அவர்கள் கருதியதில்லை. தாழ்வு மனப்பான்மை எனக்கு வராமல் இருக்க இதனை என் பெற்றோர் செய்தனர். என்னுடைய சின்ன சின்ன வெற்றியையும் அவர்கள் கொண்டாட தவறியதில்லை. என்னுடைய நண்பர்களும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். இந்த மதிப்பெண்கள் என்னை மேலும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. முயன்றால் எதுவும் சாத்தியம் தான் என்பதை நான் இப்போது உணர்ந்துவிட்டேன்" என்றார்.
இதனிடையே, ஹன்னாவிற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.