CBSE தேர்வு முடிவுகள்: எல்லா பாடத்துலயும் செண்டம்.. இந்தியாவை திரும்பி பார்க்க வச்ச 2 மாணவிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்று வெளியான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளில் இரண்டு மாணவிகள் 500க்கு 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் வலியுறுத்தி வந்தநிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாகும். 98.83% தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் பிராந்தியம் முதல் இடத்தையும், 98.16% விகிதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
500க்கு 500
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த டான்யா சிங் என்னும் 12 ஆம் வகுப்பு மாணவி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார். அதாவது 5 பாடங்களிலும் செண்டம் வாங்கியுள்ளார் சிங். இதனையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய சிங்,"பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர். பல மாதிரி வினாத்தாள்கள் மூலம் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பலனாகவே இவ்வளவு மதிப்பெண்களை என்னால் பெறமுடிந்தது" என்றார்.
என்னால் நம்பவே முடியவில்லை
இதேபோல் நொய்டாவை சேர்ந்த யுவாக்ஷி விக் என்னும் 12 ஆம் வகுப்பு மாணவியும் 500 க்கு 500 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில் படித்த இவர் ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், உளவியல் மற்றும் ஓவியம் ஆகிய தேர்வுகளில் பங்கேற்று அனைத்து பாடங்களிலும் செண்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,"நான் உண்மையில் இவ்வளவு மதிப்பெண்களை எதிர்பார்க்கவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்பதில் எனது முழு கவனத்தையும் செலுத்தினேன். மேலும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அனைத்திலும் செண்டம் வாங்குவேன் என நினைக்கவில்லை" என்றார் மகிழ்ச்சியாக. இந்நிலையில், யுவாக்ஷிக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
