'அம்மா எனக்கு ஒண்ணும் ஆகாதுல?'... 'உடைந்து நொறுங்கிய பெற்றோர்'... 'துரத்திய கொடிய வியாதி'... சாதித்து காட்டிய நம்பிக்கை சிறுவன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொடிய வியாதி தன்னை துரத்திய போதும், எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வில் சாதித்துக் கட்டியுள்ளான் சிறுவன் ஒருவன்.
பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் வசித்து வருபவர் ரோகித். 16 வயது சிறுவனான ரோகித் மல்லேசுவரத்தில் உள்ள என்.பி.எஸ். பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் 10-ம் வகுப்பு படித்தார். மற்ற சிறுவர்களைப் போலப் பள்ளிக்குச் சென்று வந்த சிறுவன் ரோகித்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஏதாவது வைட்டமின் குறைபாடாக இருக்கலாம் என நினைத்து மருத்துவர்களிடம் காட்டியுள்ளார்கள். அப்போது மருத்துவர் சிறுவனுக்கு சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து ரோகித்திற்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவைக் கண்டு சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து போனார்கள். ரோகித்துக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தனக்கு ஏதோ வியாதி இருப்பதை உணர்ந்த சிறுவன், எனக்கு ஒன்றும் ஆகாது இல்ல? என்று கேட்டுள்ளான். இந்த சிறிய வயதில் என் மகனுக்கு இப்படி ஒரு தண்டனையா, என அவரது பெற்றோர் கதறி அழுதார்கள். இருப்பினும் சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்க ரோகித்தின் பெற்றோர் முடிவு செய்து சிகிச்சைகளை ஆரம்பித்தார்கள்.
ரோகித் புற்றுநோய்க்குக் கொடுக்கப்பட்ட மாத்திரை, மருந்துகளையும் தினமும் எடுத்து வந்தார். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தன. அப்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரோகித் நன்றாகப் படித்துத் தேர்வை எழுதினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் ரோகித் 91 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளார். மகனின் சாதனையை அறிந்த பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள்.
இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் கூறும்போது, புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்ற நிலையிலும், ரோகித் தேர்வுக்குத் தயாராக இருந்தார். சிகிச்சை பெற்ற நிலையிலும் ஆஸ்பத்திரியிலிருந்து தேர்வு மையத்திற்குப் பயணம் செய்து 3 மணி நேரம் தேர்வு எழுதினார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்து உள்ளது என்றனர். சாதிப்பதற்குக் கொடிய வியாதி கூட தடையில்லை என நிரூபித்து இருக்கிறார் நம்பிக்கை சிறுவன் ரோகித்.