அந்தரத்தில் நின்ற கேபிள் கார்.. 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உள்ளே சிக்கிய 11 பேரை துணிந்து மீட்ட வீரர்கள்.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇமாச்சல பிரதேச மாநிலத்தில் பாதியில் நின்ற கேபிள் காரில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக மீட்டுள்ளனர் அதிகாரிகள். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்தரத்தில் நின்ற கேபிள் கார்
இமாச்சல பிரதேசத்தின் பர்வனூ பகுதியில் அமைந்துள்ள கேபிள் கார் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கேபிள் கார் பயணத்தை மிகவும் விரும்பி மேற்கொள்கின்றனர். அப்படி இன்று காலை சாகச பயணம் செய்ய விரும்பி இந்த கேபிள் காரில் ஏறிய 11 பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பயணம் துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே அந்தரத்தில் பெட்டி நின்றுவிட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெட்டியை இயக்க முடியாமல் போகவே, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
3 மணி நேரம்
பாதிவழியில் கேபிள் கார் நின்றதால் அந்த பகுதி முழுவதும் உள்ள மக்கள் திரண்டனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள், கேபிள் காரில் சிக்கியிருந்த 11 பயணிகளையும் பத்திரமாக மீட்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனிடையே உள்ளூர் மர டிரெயில் ஆபரேட்டர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதன் மூலம், 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 11 பயணிகளும் ரோப் மூலமாக பத்திரமாக கீழே இறக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த மக்கள் ஆசுவாசம் அடைந்தனர்.
முதல்வர் ஆய்வு
இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் மீட்பு பணிகளுக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"NDRF மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அனைத்து பயணிகளும் மீட்கப்படுவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
சோகம்
கடந்த 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இதே இடத்தில் கேபிள் கார் சவாரியின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெட்டி பாதியிலேயே நின்றுவிட்டது. அப்போதும் கேபிள் காரின் உள்ளே 11 பயணிகள் சிக்கியிருந்த நிலையில் இந்திய விமானப்படை வீரர்கள் அவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.
#WATCH Cable car trolly with tourists stuck mid-air at Parwanoo Timber Trail, rescue operation underway; tourists safe#HimachalPradesh pic.twitter.com/mqcOqgRGjo
— ANI (@ANI) June 20, 2022