'சிக்னல் சுத்தமா இல்ல...' 'அடர் இருட்டு...' 'கார் வேற சேத்துக்குள்ள சிக்கிடுச்சு...' 'கரெக்ட்டா மிட்நைட் 1:30 மணிக்கு...' - நடுங்க செய்யும் 'திக்திக்' நிமிடங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுன்பெல்லாம் வழி தெரியாத இடங்களில் அப்பகுதியில் வசிக்கும் மனிதர்களிடம் வழி கேட்டு செல்வது வழக்கம். ஆனால், இன்றைய நவீன உலகில் அனைத்தும் செல்போனில் வந்து விட தெரியாத இடங்களுக்கு கூட கூகுள் மேப் உதவியுடன் சென்று வருகின்றனர்.

ஆனால், எப்போதும் மனித உதவி இல்லாமல் இருக்க முடியாது என்பதற்கு சான்றாக சில சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த குடும்பத்தார் கூகுள் மேப் உதவியுடன் காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த டாக்டர் நவாப்வாஜித், அவரது மனைவி மேய்மா, உறவினர் ஷானாவுடன் மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று முன்தினம் (07-08-2021) தேவிகுளம் விடுதியில் இருந்து புறப்பட்ட அவர்கள் டாப் ஸ்டேஷன் சென்றனர்.
அங்கிருந்து விடுதி வர வழி தெரியாத நிலையில் 'கூகுள் மேப்' உதவியுடன் காரில் விடுதி நோக்கி திரும்பினர். அப்போது நேர்வழிக்கு பதிலாக 'கூகுள் மேப்' காட்டிய மாற்றுப்பாதையில் சென்றுள்ளனர். அப்பகுதி மக்களிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை.
இரவு நேரம் ஆகியும் விடுதிக்கு திரும்பாமல் மனிதர்கள் வசிக்காத அடர் காட்டிற்குள் சிக்கிக் கொண்டனர். தர்மசங்கடமான நிலையில் தவித்துக் கொண்டிருக்க, கூடுதலாக காரும் சேற்றில் சிக்கியுள்ளது. அதோடு, வனப்பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
ஒருவழியாக நள்ளிரவு 1:30 மணி போல செல்போனில் ஒரு பாய்ண்ட் சிக்னல் கிடைத்தது. உடனே, மூணாறு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவம் அறிந்து தீயணைப்பு வீரர்கள் பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன்பின், வனப்பகுதியின் உயரமான பகுதிக்கு சென்று தீயணைப்பு வாகனத்தின் விளக்கை சுழலவிட்டுள்ளனர். அதைப்பார்த்த நவாப்வாஜித் காரின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு தாங்கள் இருக்கும் இடத்தை தீயணைப்பு வீரர்களுக்கு காட்டினர்.
வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக நேற்று (08-08-2021) அதிகாலை 5:30 மணிக்கு மீட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
