'இந்தியாவில் இந்த நோய் பாதிப்பு குறைந்து வருகிறது!' - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ‘நம்பிக்கை’ அறிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள மலேரியா குறித்த அறிக்கையில் இந்தியாவில் மலேரியா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள உலக மலேரியா அறிக்கை 2020ல், “கடந்த 2018ம் ஆண்டைவிட, 2019ம் ஆண்டில் இந்தியாவில் மலேரியா பாதிப்பு 17.6 சதவீதம் குறைந்துள்ளது. அதிக மக்கள் தொகையுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு குறையும் ஒரே ஒரு நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மலேரியா பாதிப்பு குறைந்து வருகிறது. மலேரியா பாதிப்பு 2019ம் ஆண்டு 21.27 சதவீதமும், உயிரிழப்பு 20 சதவீதமும் குறைந்துள்ளது. மலேரியா பாதிப்பு எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 4,29,928-ஆகவும், உயிரிழப்பு 96-ஆகவும் இருந்தது.
இந்தியாவில் ஏற்பட்ட மொத்த மலேரியா பாதிப்பு 2020ம் ஆண்டில் அக்டோபர் வரை 1,57,284 ஆகவும், கடந்தாண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 45.02 சதவீதம் குறைவு. ஏனெனில் கடந்தாண்டு இதே காலத்தில் மலேரியா பாதிப்பு 2,86,091-ஆக இருந்தது. இந்தியாவில் மலேரியா ஒழிப்பு நடவடிக்கை, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2016ல் தீவிரப்படுத்தியது. இதற்காக மலேரியா ஒழிப்பு தேசிய திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2022 வரையிலான மலேரிய ஒழிப்புக்கான தேசிய உத்தி திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொடங்கியதன் காரணமாக முதல் 2 ஆண்டுகளுக்கு, உயிரிழப்பு 27.7 சதவீதம் மற்றும் 49.5 சதவீதம் குறைந்தது. 2015ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 11,69,261ஆகவும், உயிரிழப்பு 385 ஆகவும், அதே சமயம் 2017ம் ஆண்டில் மலேரியா பாதிப்பு 8,44,558 ஆகவும், உயிரிழப்பு 194 ஆகவும் குறைந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
