"என் மகன் பிஸ்கட் கேட்டா.. அன்னைக்கு பஸ்ல போக முடியாது".. தூய்மை பணியாளர் டூ ஜெனரல் மேனேஜர்.. பசியை படிப்பால் வென்ற பெண்மணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதூய்மை பணியாளராக வாழ்க்கையை துவங்கி இன்று வங்கியின் துணை நிர்வாக மேலாளராக உயர்ந்துள்ளார் பிரதிக்ஷா டோண்ட்வால்கர். இவருடைய வாழ்க்கை பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
Also Read | ஐடி வேலையை விட்டுட்டு கழுதை வளர்க்க போன நபர்.. கைகொடுத்த தொழில்.. மனுஷன் இப்போ லட்சாதிபதி..!
சோகம்
டோண்ட்வால்கர் 1964 இல் புனேவில் பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் ஏழ்மையில் இருந்ததால், அவர் 10 ஆம் வகுப்புத் தேர்வுகளை முடிப்பதற்குள், 16 வயதில் சதாசிவ் காடு என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். சதாசிவ் எஸ்பிஐ வங்கியில் பைண்டராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு மகன் பிறந்த நேரம், சொந்த ஊரில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவெடுத்திருக்கிறார்கள் இருவரும். அந்த பயணத்தின் போது, நடந்த விபத்தில் சதாசிவ் உயிரிழந்தார். அப்போது டோண்ட்வால்கருக்கு வயது 20.
கணவன் உயிரிழந்த நிலையில், கையில் மகன் விநாயக் உடன் போராடி வந்திருக்கிறார் அவர் அப்போது, தனது கணவர் பணிபுரிந்த வங்கி அலுவலகத்துக்கு சென்ற டோண்ட்வால்கர், தனக்கு ஏதாவது வேலை வழங்கும்படியும் தன்னுடைய மகனை வளர்க்க மிகுந்த சிரமப்படுவதாக மேலாளரிடம் தெரிவித்திருக்கிறார் டோண்ட்வால்கர்.
தூய்மைப்பணி
டோண்ட்வால்கரின் நிலையை அறிந்த மேலாளர், அவருடைய கல்வி தகுதி குறைவாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். வங்கியில் தூய்மை பணியாளர் வேலை காலியாக இருப்பதை அறிந்த டோண்ட்வால்கர், அந்த வேலையை தான் செய்வதாக கூறியுள்ளார். இதற்கு மேலாளர் சம்மதம் தெரிவிக்கவே பகுதி நேர வேலையாக காலையில் வங்கியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்திருக்கிறார் அவர். மாதம் 60 - 65 ரூபாய் கிடைக்கும் என்பதால் அந்த வேலையை செய்ததாகவும், அதே நேரத்தில் சிறிய சிறிய வேலைகளை செய்து தனது மகனை பார்த்துக்கொண்டதாகவும் கூறுகிறார் டோண்ட்வால்கர்.
படிப்பு
இந்நிலையில், பணிபுரிந்துகொண்டே 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் டோண்ட்வால்கர். இதற்கு அவருடைய உறவினர்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்திருக்கிறார்கள். குறிப்பாக புத்தகங்கள் உள்ளிட்டவற்றை அவருக்கு வாங்கி கொடுத்திருக்கின்றனர். இதன்மூலம், 12 ஆம் வகுப்புக்கு பிறகு இரவு நேர கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார் அவர். அதன் பலனாக அவருக்கு வங்கியில் கிளெர்க் வேலை கிடைத்திருக்கிறது. இதனிடையே 1993 ஆம் ஆண்டு பிரமோத் டோண்ட்வால்கர் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். அதன் பிறகு உத்வேகத்துடன்பணிபுரிந்துவந்த டோண்ட்வால்கர், தற்போது வங்கியின் இணை நிர்வாக மேலாளராக உயர்ந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் பேசுகையில், பல கடினமான நாட்களை நான் கடந்து வந்திருக்கிறேன். என் மகன் ஒரு பிஸ்கட் பாக்கெட் கேட்டால், அன்று ஒரு ஸ்டாப்பிற்கு முன்னே பேருந்தில் இருந்து இறங்கி நடந்து செல்வேன். அதன்மூலம் பணத்தை மிச்சப்படுத்தி அவனுக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்குவேன். என்னுடைய உறவினர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். என்னை பொறுத்தவரையில் ஒருவருக்கு குடும்பம் மிகவும் முக்கியம். என்னுடைய கதை பலருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியது" என்கிறார்.