6000 கிமீ தூரம்.. 110 நாள் ரன்னிங்.. கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்.. யாருப்பா இந்த சுஃபியா கான்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலையை 110 நாட்களில் ஓடி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த சுஃபியா கான்.
Russia – Ukraine Crisis: 'தனி மனிதனின் அதிகார பணவெறி'.. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பரபரப்பு பதிவு..!
சுஃபியா கான்
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் சுஃபியா கான். இளம் வயது முதலே தடகள போட்டிகளில் ஆர்வம் கொண்ட இவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. இருப்பினும் தன்னுடைய தடகள ஆசையின் காரணமாக அந்த வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் இந்த சிங்கப்பெண்.
சாதனை
ஓட்டத்தில் கில்லியான சுஃபியா கான், இதுவரையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். லே-மணாலி நெடுஞ்சாலையின் 480 கிலோமீட்டர் தூரத்தை 6 நாட்கள், 12 மணி நேரம், 6 நிமிடங்களில் ஓடி அனைவரையும் திகைக்க வைத்தவர் இவர். அதேபோல, கடந்த 2019 ஆம் ஆண்டில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 87 நாட்களாக இடைவிடாமல் ஓடி இறுதியில் கன்னியாகுமரி வந்தடைந்தார் சுஃபியா. இதற்காக அவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஒரு கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இவர். டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு முக்கியப் பெருநகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான தங்க நாற்கரச் சாலையில் 6,002 கிலோமீட்டர் தூரத்தை 110 நாட்கள், 23 மணி நேரம், 24 நிமிடங்களில் ஓடி புதிய கின்னஸ் சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறார் இந்த தடகள வீராங்கனை.
மன உறுதி
இடைவிடாத ஓட்டத்திலும் தன்னுடைய முயற்சியை கைவிட ஒருபோதும் நினைத்ததில்லை எனக் கூறுகிறார் இவர். இந்த சாதனை குறித்து சுஃபியா கான் பேசுகையில்," ஓட்டத்தின் போது பல காயங்கள் ஏற்பட்டாலும், எனது முழு கவனம் இந்த முயற்சியை குறைந்த நேரத்தில் முடிப்பதில் தான் இருந்தது. நான் கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் ஓடியிருக்கிறேன். அப்போது, அங்கிருந்த உள்ளூர் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் சைக்கிள் பயணிகள் என்னை உற்சாகப்படுத்தினார். சில நாட்கள் ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம். பலர் தங்களது வீட்டில் உணவளித்து தங்க இடமளித்தனர். இரண்டு நாட்கள் மட்டும் சாலை ஓரங்களில் தூங்க வேண்டியிருந்தது" என்றார்.
சுஃபியா கானின் முயற்சிக்கு அவருடைய கணவர் பக்கபலமாக இருந்திருக்கிறார். இவர் ஓடும்போது, கூடவே காரில் பயணித்த அவரது கணவர், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் பயண அட்டவணையை கவனித்திருக்கிறார்.
இந்தியாவின் தங்க நாற்கர சாலையை 110 நாட்களில் ஓடி கின்னஸ் சாதனை படைத்த சுஃபியா கானுக்கு சமூக வலைத் தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன.