ஏற்கனவே மேட்ச் தோத்த சோகம்.. இப்போ இதுவேறையா.. கேன் வில்லியம்சனுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஐபிஎல் நிர்வாகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று புனே மைதானத்தில் 5-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும், ஜாஸ் பட்லர் 35 ரன்களும், ஹெட்மையர் 32 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினார். இதில் கேன் வில்லியம்சன் 2 ரன்னிலும், அபிஷேக் சர்மா 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ராகுல் திருப்பதி மற்றும் நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினர்.
இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய ஐடன் மார்க்ராம் (57* ரன்கள்) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. அதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மெதுவாக பந்து வீசியதற்காக ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. முன்னதாக டெல்லிகேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதேபோல் செயல்பட்டதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.