விளையாடிய முதல் மேட்சே சோதனை.. ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த SRH..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டேவிட் வார்னர் ரஷித் கான் ஆகிய வீரர்கள் இல்லாமல் ஹைதராபாத் அணி சந்திக்கும் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும், ஜாஸ் பட்லர் 35 ரன்களும், ஹெட்மையர் 52 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில் கேன் வில்லியம்சன் 2 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராகுல் திருப்பதி மற்றும் நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினர். அதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்திருந்தது. இதன் மூலம் பவர் பிளே ஓவர்களில் குறைந்த ரன்கள் அடித்த அணிகளில் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஹைதராபாத் அணி மோசமான சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எடுத்தது. அதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஹைதராபாத் அணியின் ஐடன் மார்க்ராம் 57 ரன்களும், வாசிங்டன் சுந்தர் 41 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.