'இனிமேல் பணம் எடுக்க மொபைல் அவசியம்'... 'ஏடிஎம் நடைமுறையில் மாற்றம்'... அதிரடியாக அறிவித்துள்ள வங்கி!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் பயனர்கள் இனி ஏ.டி.எம்மில் பணம் எடுக்க இனி OTP அவசியம் என அந்த வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக ஏ.டி.எம் கார்டு மூலமாகப் பல மோசடிகள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் மோசடி செய்யும் நபர்களின் வலையில் வீழாமல் இருப்பதற்காக, பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் எஸ்.பி.ஐ டெபிட் கார்டுகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில் இனி பணம் எடுக்கும் போது அவர்களது வங்கிக் கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வருகின்ற OTP எண்ணைக் கொடுத்தால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
தற்போதைக்கு பத்தாயிரம் மற்றும் அதற்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த OTP நடைமுறை பின்பற்றப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது நாட்டில் உள்ள அனைத்து எஸ்.பி.ஐ ஏ.டி.எம் மையங்களில் வரும் 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி பணம் எடுக்க ஏ.டி.எம் மையங்களுக்குச் செல்லும் போது, அவசியம் மொபைல் போனையும் எடுத்துச் செல்ல வேண்டும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மொபைல் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைக்காதவர்கள் சம்மந்தப்பட்ட வங்கியின் கிளை அல்லது ஏ.டி.எம் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.