‘ரயில்நிலையங்களில் இனி இதை’... ‘பயன்படுத்த முடியாது’... மத்திய அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Aug 22, 2019 09:14 AM
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை, ரயில் நிலையங்களில் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த மத்திய ரயில்வே துறை, இந்த தடை உத்தரவு அக்டோபர் 2 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை கடைபிடிக்கவும், முதற்கட்டமாக 360 முக்கிய ரயில்நிலையங்களில் 1,853 பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் நசுக்கும் இயந்திரங்களை விரைவாக அமைக்கவும் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில், ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை திருப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்ற போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய ரயில்வே நிர்வாகம் பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தியைக் குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி. அனுமதியோடு தடையை மீறி நடைமேடைகளில் பாட்டில்களில் குடிநீர் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு கட்டாயமாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய ரயில்வே நிர்வாகம், நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் உணவகங்கள், பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.
