ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தலைவராகும் தமிழர்.. வெளிவந்த வேறலெவல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏர் இந்தியாவின் புதிய சேர்மேனாக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள என். சந்திரசேகரன் ஏர் இந்தியாவின் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக இன்று நடைபெற்ற நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தலைவராக இருப்பார் என தகவல்கள் முன்னர் வெளியானது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திர சேகரன் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
ஏர் இந்தியா
இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கி இருந்தாலும் சிஇஓ உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமலேயே இருந்தனர். நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சேவையை நிர்வாக குழு மட்டுமே கவனித்தது வந்தது. இந்நிலையில், ஏர் இந்தியாவின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் அந்நிறுவனத்தின் சிஇஓ யார் என்பதை மூத்த அதிகாரிகள் தேர்ந்தெடுப்பார்கள் எனத் தெரிகிறது.
நடராஜன் சந்திரசேகரன்
1963 ஆம் ஆண்டு தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் பிறந்த நடராஜன் சந்திரசேகரன் அரசு பள்ளியில் படித்தவர். பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்பை முடித்த பின்னர் சந்திரசேகரன் கடந்த 1987 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் பணிக்குச் சேர்ந்தார். 30 வருடங்களாக கடுமையாக உழைத்து வரும் இவர் டாடா சன்ஸ் மட்டும் அல்லாது பல டாடா குழும நிறுவனங்களுக்கும் தலைவராக இருக்கிறார்.
தலைவர்
டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ், இந்தியன் ஹோட்டல் கோ, டாடா பவர், ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தலைவராக இருக்கும் சந்திர சேகரன் அவர்களை கடந்த ஒரு வருட காலத்தில் புதிதாக மூன்று நிறுவனங்களுக்கும் தலைவர் ஆக்கி இருக்கிறது டாடா குழுமம்.
புகழ்பெற்ற ஏர் இந்தியாவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.