'அந்த மனுஷனுக்கு பணம் மட்டும் முக்கியம் இல்ல'... 'பெரும் எதிர்பார்ப்பில் ஃபோர்டு ஊழியர்கள்'... என்ன செய்யப்போகிறது டாடா?
முகப்பு > செய்திகள் > வணிகம்டாடா நிறுவனம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தான் ஃபோர்டு ஊழியர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இருக்கும் இரு தொழிற்சாலைகளை மூடுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.
ஃபோர்டு நிறுவனத்தை நம்பி இருந்த டீலர்கள், வாகன உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எனப் பலரும் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துப் போனார்கள். ஃபோர்டு நிறுவனத்திற்குச் சென்னை மறைமலைநகர் மற்றும் குஜராத் சனந்த் பகுதிகளில் இரு தொழிற்சாலைகள் உள்ளது.
இதையடுத்து இந்த பிரச்சனை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இதில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கவனத்தில் கொள்ளப்பட்டு, ஃபோர்டு நிறுவனத்தை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது. இதன் மூலம் அங்கு உள்ள பணியாளர்கள் தங்களின் வேலை மற்றும் பணப்பலன் குறித்துப் பயப்பட்ட நிலையில், சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்கள்.
தற்போது தமிழக அரசின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அந்த வகையில் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் ஃபோர்டு நிறுவனம், வேறு ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்திற்கு விற்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதோடு, தமிழகத்திற்கான வரி வருவாயும் கிடைக்கும்.
இதனிடையே ஃபோர்டு நிறுவனம், டாடா நிறுவனத்திடம் நிலம் மற்றும் அங்கு கார் தயாரிக்கும் தொழிற்சாலை என அனைத்தையும் விற்க ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசும் சில மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளிலும் உதவி வருவதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் டாடா நிறுவனத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில் டாடா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், சென்னையை அடுத்த சிறுசேரியில் டாடா நிறுவனத்தின் டிசிஎஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற செய்திகள்
