மாணவர்களுடன் சேர்ந்து போராட்ட அறிவிப்பு: வீட்டுக்காவலில் புகழ்பெற்ற நடிகர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 22, 2019 02:10 PM

தெலுங்கில் புகழ்பெற்ற நடிகரும், கல்விக்குழுமங்களின் தலைவருமானவர் டாக்டர். மோகன் பாபு. இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் ஆந்திரா மட்டுமல்லாது தென்னிந்தியாவையே அதிர வைத்துள்ளன.

mohan babu placed house arrest for his protest demanding student fees

இரண்டு நாட்களாக மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மோகன் பாபு, தான் நடத்திவரும் ஸ்ரீ வித்யாநிகேதன் கல்விக்குழுமத்தில் இருந்து அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வித் தொகையை ஆந்திர அரசு செலுத்த முன்வராததைக் கண்டித்து மீண்டும் மாணவர்களுடன் சேர்ந்து பேரணி போராட்டத்தை நடத்த இன்று (மார்ச் 22, 2019, வெள்ளி) காலை 10 மணிக்கு அறிவித்திருந்தார்.

இன்னொருபுறம் மோகன் பாபுவின் மகன்களான மன்ச்சு விஷ்ணு மற்றும் மன்ச்சு மனோஜ் இருவரும் காலை 7 மணியில் இருந்தே திருப்பதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.  நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் திருப்பதியில் நிகழ்ந்திருக்கவுள்ள இந்த பேரணி தொடங்கும் முன்னரே, போலீஸார் மோகன் பாபுவின் வீடு மற்றும் கல்விக்குழுமத்தை சூழ்ந்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதுபற்றி நடிகர் மோகன் பாபு தனது ட்வீட்டில், ஏறத்தாழ 19 கோடி ரூபாய் வரை மாணவர்களுக்காக செலுத்த வேண்டிய கல்வி உதவித் தொகையை ஆந்திர அரசு செலுத்த மறுப்பதாகவும், அதற்காக அமைதியான வழியில் போராட நினைத்தால் கூட போலீஸ் வந்து நிற்கிறது. இதனால் பேரணி நடத்த முடியாது போய்விடும் போலிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய, மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மன்ச்சு, தனது அப்பா மிரட்டலுக்கு பணியாதவர். தங்களையும் அவ்வாறே வளர்த்தார். ஆனால் மற்ற கல்லூரி குழுமங்கள் ஏன் இந்த விஷயத்தில் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்? அவர்களும் மிரட்டலுக்கு அஞ்சுகிறார்களா? அல்லது சோரம் போகிறார்களா? என்றும்  கேட்டுள்ளார்.

Tags : #COLLEGESTUDENTS #PROTEST #EDUCATION #RALLY #MOHANBABU #ACTOR #ANDHRAPRADESH