இந்தியாவில் விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை..? - இன்ப அதிர்ச்சி தரும் தகவல்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய அரசு, வரும் 2022 நிதியாண்டு முதல் ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளை (லேபர் கோட்ஸ்) அமல் செய்யும் என்று சொல்லப்படுகிறது. அதாவது வேலை செய்யும் நபர்களுக்கான சம்பளம், தொழில் சார்ந்த உறவு முறை, பணி சார்ந்த பாதுகாப்பு உள்ளிட்டவைகள் இந்த புதிய விதிகளின் கீழ் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய விதிகள் அமல்படுத்தப்படும் பட்சத்தில் மொத்த வேலை சூழலுமே மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. பணியாளர்கள் மாதந்தோறும் பெறும் ஊதியம், வேலை செய்யும் நாட்களில் பணி நேரம் மற்றும் வாரத்தில் வேலை செய்யும் தினங்கள் உள்ளிட்டவைகளிம் மாற்றங்கள் வருமாம். அதில் மிகவும் கவனிக்கத்தக்கது, இந்த புதிய விதிகள் அமல் செய்யும் பட்சத்தில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிங் வேலை செய்யும் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.
அதே நேரத்தில், ஊழியர்கள் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் ஒரு நாளில் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டிய சூழல் உருவாக்கப்படுமாம். அதாவது, என்ன தான் வேலை நாட்கள் குறைக்கப்பட்டாலும், ஒரு வாரத்தில் 48 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்கிற நடைமுறை மாற்றப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய விதிகள் மூலம் அடிப்படை ஊதியம் மற்றும் பி.எஃப் உள்ளிட்டவைகளிலும் பெரிய மாற்றம் இருக்கும். அதாவது பி.எஃப் மூலம் சேமிக்கப்படும் பணம் அதிகரிக்கும் என்றும் கையில் வாங்கும் ஊதியம் குறையும் என்று தெரிகிறது.
இந்தப் புதிய விதிகளின் இறுதிக்கட்ட பணிகளை மத்திய அரசு முடித்துவிட்டது. விதிகளின் சாரம்சத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. தற்போது மாநிலங்கள், தங்களுக்கு ஏற்றவாறு அதில் சிறிய மாற்றங்களை மட்டும் செய்யும். அதைத் தொடர்ந்து விதிகள் அமலுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.
மத்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் சொல்வது என்னவென்றால், ‘இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே லேபர் கோட்ஸ் எனப்படும் இந்தப் புதிய விதிகளை மத்திய அரசு இறுதி செய்துவிட்டது. ஆனால், அதை உடனடியாக அமல் செய்ய முடியாது. காரணம், ஊழியர்கள் சார்ந்த விதிகள் என்பதில் மத்திய அரசு தன்னிச்சையாக எந்த வித முடிவுகளையும் எடுக்க முடியாது. அதற்கு மாநில அரசுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால் தான் இந்த தாமதமானது நிலவி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.