இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் COVAXIN பரிசோதனை!.. தயார் நிலையில் மருத்துவமனைகள்!.. அடுத்தது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை முதல் மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்து கோவேக்ஸின் (COVAXIN) மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்பட உள்ளது.
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பு மருந்து ஹரியானாவில் மூன்று பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இச்சோதனையை அதிக அளவில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 100 தன்னார்வலர்கள் இச்சோதனைக்குத் தயாராக உள்ளனர். மேலும், 375 பேரிடம் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதிக்கப்பட இருப்பதாக மருந்தைத் தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் பரிசோதனையின் முதல் கட்டம் நாளை தொடங்குகிறது. நாட்டின் 12 முன்னணி மருத்துவமனைகளின் மூத்த மருத்துவக் குழுவினர் இச்சோதனையில் பங்கேற்கின்றனர். இதற்கான மத்திய அரசின் அனுமதியை மருத்துவமனை நிர்வாகம் பெற்றுள்ளது.