இந்தியாவிலேயே இறக்க விரும்புகிறேன்.. நெகிழ்ச்சியில் தலாய் லாமா சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிபெத்தின் புத்தமத தலைவரான தலாய் லாமா இந்தியாவிலேயே இறக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
தலாய் லாமா
திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் 1935ம் ஆண்டில் பிறந்தவர் தலாய் லாமா. இவரது இயற்பெயர் லாமொ தொண்டுப். சிறுவயதில் கல்வி மட்டுமல்லாது, விளையாட்டு, தியானம் என பல்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவர் தனது 25 வது வயதில் புத்த சமய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். திபெத்தில் புத்த மத தலைமைப்பொறுப்பில் இருப்பவரை தலாய் லாமா என்று அழைக்கிறார்கள். அப்படி 1950 ஆம் ஆண்டு அந்த பொறுப்பை ஏற்றார்.
திபெத்தை தனி நாடாக அங்கீகரிக்கும்படி சீனாவிற்கு கோரிக்கை வைத்தார் தலாய் லாமா. ஆனால், இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் பலனிக்கவில்லை. இதனையடுத்து, 1959 ஆம் ஆண்டு தனது சீடர்களுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் தலாய் லாமா. அவருடன் சில அரசு அதிகாரிகளும் இந்தியா வந்தனர். தற்போது ஹிமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் தலாய் லாமாவும் அவரது சீடர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
விருப்பம்
இந்நிலையில், தலாய் லாமாவை அமெரிக்காவின் இளம் தலைவர்கள் சந்தித்து உரையாடினர். அப்போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தனது மரணம் குறித்து தான் கூறிவற்றை நினைவுகூர்ந்தார் தலாய் லாமா. அப்போது," நான் அடுத்த 15 - 20 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். இறக்கும் நேரம் வரும்போது, நான் இந்தியாவையே தேர்ந்தெடுப்பேன். ஏனெனில், இந்தியர்கள் அன்பு மிக்கவர்கள். அவர்களிடம் செயற்கைத்தனம் ஏதும் இல்லை. எனவே, அவர்கள் மத்தியிலேயே இறக்க விரும்புகிறேன். ஒருவேளை சீன அதிகாரிகள் சூழ நான் இறந்தால், அங்கு அது மிகவும் செயற்கையானவையாக இருக்கும். சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் மரணம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்" என மன்மோகன் சிங்கிடம் கூறியதாக தலாய் லாமா தெரிவித்திருக்கிறார்.
மேலும், சமீபத்தில் தலாய் லாமா வீடியோ ஒன்றையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், உண்மையாகவே வருந்தக்கூடிய நம்பிக்கையான நண்பர்கள் மத்தியில்தான் ஒருவர் உயிரிழக்க வேண்டும் என தலாய் லாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.