செல்ல நாய்க்கு பாரம்பரிய முறையில் திருமணம்.. பத்திரிகை அடிச்சு, விருந்து போட்டு அமர்க்களப்படுத்திய குடும்பத்தினர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானாவில் ஆசையாக வளர்த்த நாய்க்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் ஒரு குடும்பத்தினர். இது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள பலாம் விஹார் பகுதியை சேர்ந்தவர் சவிதா. இப்பகுதியில் தனது கணவருடன் வசித்துவருகிறார் சவிதா. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருக்கிறார் சவிதாவின் கணவர். விலங்குகளிடத்தில் அன்புடன் பழக்கூடிய இருவரும் அவைகளுக்கு உணவு அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கின்றனர்.
அப்படி, கோவிலில் ஒரு நாய்க்குட்டிக்கு உணவு அளித்திருக்கிறார் சவிதாவின் கணவர். பின்னர் அவர் வீடு திரும்பும்போது அந்த பெண் நாய்க்குட்டியும் அவர் பின்னாடியே வந்திருக்கிறது. இதனை கண்ட சவிதா அந்த நாய்க்குட்டியை வளர்க்க தீர்மானித்திருக்கிறார். அதற்கு ஸ்வீட்டி எனப்பெயரிட்ட தம்பதி தங்களது குழந்தைகள் போல அந்த நாயை வளர்த்து வந்திருக்கின்றனர். இதனிடையே தங்களது நாய்க்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என இருவரும் முடிவெடுத்திருக்கின்றனர்.
அதன்படி அருகில் வசித்துவரும் ஒருவருடைய வீட்டில் வளர்க்கப்படும் ஷேரு எனும் ஆண் நாய்க்கும் தங்களது ஸ்வீட்டிக்கும் திருமணம் நடத்த சவிதா முடிவு செய்திருக்கிறார். இதற்கு ஷேரு-வின் உரிமையாளர்களும் ஒப்புக்கொள்ளவே இந்த நிகழ்வை கொண்டாட நினைத்திருக்கிறது இருவரது குடும்பமும். அதன்படி, 100 பத்திரிக்கைகள் அடிக்கப்பட்டு அந்த பகுதி மக்களை திருமணத்திற்கு அழைத்திருக்கிறார்கள் இருவீட்டாரும்.
பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் ஹால்தி, மெஹெந்தி ஆகிய வைபவங்களும் நடந்திருக்கின்றன. இதுபற்றி மகிழ்ச்சியுடன் பேசிய சவிதா,"நான் ஒரு செல்லப்பிராணிகளின் காதலி. எனக்கு குழந்தை இல்லை, அதனால் ஸ்வீட்டி (பெண் நாய்) எங்கள் குழந்தையாகவே வளர்ந்தது. என் கணவர் கோயிலுக்குச் சென்று கால்நடைகளுக்கு உணவளித்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் தெருநாய் அவரைப் பின்தொடர்ந்து எங்களிடம் வந்தது. நாங்கள் அவளுக்கு ஸ்வீட்டி என்று பெயரிட்டோம். இப்போது எங்களது ஸ்வீட்டிக்கு திருமண வயது வந்துவிட்டதாக சிலர் சொன்னார்கள். ஆகவே இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தோம்" என்றார்.
இதனால் காவல்துறையினர் தங்களை கைது செய்யலாம் எனவும் சிலர் கூறியதாகவும் ஆனால் தான் பயப்படவில்லை என்கிறார் சவிதா. ஸ்வீட்டியின் திருமணம் குறித்து தனது கணவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் சவிதா கூறுகிறார்.
ஸ்வீட்டிக்கும் ஷேருவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு விருந்து போட்டு அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள் சவிதாவும் அவரது கணவரும். இதனிடையே திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

மற்ற செய்திகள்
