"அவர் வாங்குன சம்பளத்தை விட 650 மடங்கு அதிகமா சொத்து வச்சிருக்காரு".. அதிரடி ரெய்டு நடத்திய அதிகாரிகள்.. எல்லோருக்கும் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவரின் வீட்டில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த சம்பவம் அம்மாநிலத்தையே பரபரப்படைய செய்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வரும் அதிகாரி ஒருவரின் வீட்டில் நேற்று பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் (EOW) அதிரடி பரிசோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து 16 லட்சம் ரொக்கம் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பல சொகுசு கார்கள் மற்றும் பல ஆவணங்களை கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும், அந்த அதிகாரியின் வீட்டில் மினி தியேட்டர் ஒன்று இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்திருக்கின்றனர்.
650 மடங்கு
ஜபல்பூரின் ஷதாப்தி புரம் காலனியில் இருந்த அந்த அதிகாரியின் வீட்டில் இருந்து பல வீடுகளின் ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில், அதிகாரியின் வீட்டில் செலவு மற்றும் வாங்கிய சொத்துகளின் மதிப்பு அவரது சேவைக் காலத்தில் அவர் பெறும் மொத்த வருமானத்தை விட 650 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவின் SP தேவேந்திர பிரதாப் சிங் இதுபற்றி பேசுகையில்,“ஆர்டிஓ சந்தோஷ் பால் மற்றும் கிளெர்க்காக பணிபுரியும் அவரது மனைவி ரேகா பால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பதாக எங்களுக்கு புகார் வந்தது. அதை ஸ்வர்ஞ்சித் சிங் தாமி சரிபார்த்தார். இரவு நேர விசாரணையில், ஆர்டிஓவின் வருமானத்தை விட 650 மடங்கு மதிப்புள்ள சொத்துகள் இருப்பது தெரியவந்தது" என்றார்.
சிக்கிய ஆவணங்கள்
விசாரணையின் போது, PP காலனி குவாரிகாட்டில் 1,247 சதுர அடி வீட்டின் ஆவணங்களை EOW அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதேபோல் சங்கர் ஷா வார்டில் 1,150 சதுர அடி மற்றும் சதாப்தி புரத்தில் 10,000 சதுர அடியில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், கஸ்தூரிபா காந்தி வார்டில் 570 சதுர அடி மற்றும் கர்ஹா பாதக்கில் 771 சதுர அடி மற்றும் திகா கெடா கிராமத்தில் உள்ள வீடுகள் தொடர்பான தகவல்களும் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
