இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதால் இந்திய அரசு சர்வதேச விமானப் பயணிகளுக்கு சமீபத்தில் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது.
இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இந்த வகையில் தற்போது தமிழ்நாட்டுக்குள் நுழைவதற்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இதனால் தற்போது தமிழ்நாடு எல்லைக்குள் வரும் சர்வதேச பயணிகள் மட்டுமல்லாது வெளி மாநில பயணிகளும் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இ-பாஸ், தெர்மல் ஸ்கேனிங் ஆகிய நடைமுறைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் கடுமைபடுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் இன்னும் கூடுதலான கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
கேரள எல்லையில் இருப்பதால் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து தமிழ்நாடு வரும் பயணிகள் நிச்சயமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் கண்டிப்பாக கொரோனா தடுப்பு ஊசி 2 தவணைகள் செலுத்தி இருக்க வேண்டும்.
மேலும், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா பரிசோதனை சான்றிதழையும் உடன் வைத்திருக்க வேண்டும். இதர மாநிலங்கள் மட்டுமல்லாது யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் தமிழ்நாட்டுக்குள் நுழைய இ-பாஸ் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் மற்றும் ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என சந்தேகத்தில் இருப்பவர்கள் 13 பேர் தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.