‘இனி இ-பாஸ் ஈஸியா பெறலாம்!’.. ‘அதிரடி’ மாற்றங்களுடன் கூடிய ‘இந்த’ புதிய ‘வசதி’! - தமிழக அரசு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் (ePass) வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா (Covid19Pandemic) பரவுவதைத் தடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனையின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டங்களுக்கிடையே பயணிப்பதற்கு நேற்று வரை இ-பாஸ் கட்டாயமாக இருந்தது. குறிப்பாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் இறப்பு நிகழ்வு, திருமணம் மருத்துவம், வெளியூரில் சிக்கி தவிக்கும் சூழல் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டது.
இதனிடையே பல மாவட்டங்களில் இ-பாஸ் வழங்குவதில் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக எழுந்த கோரிக்கைகளை அடுத்து தமிழக அரசு இ-பாஸ் வழங்குவதில் சில தளர்வுகளை தற்போது அமல்படுத்தியது. அதன்படி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆட்டோ-ஜெனரேட் எனப்படும் தானியங்கி முறையில் உடனடியாக இ-பாஸ் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியுடன் கூடிய சில மாற்றங்களை ஆன்லைனில் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். எனினும் பொதுமக்கள் தேவையற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.