'நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள்'... 'எப்போது பயன்பாட்டுக்கு வரும்???'... 'மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ள மகிழ்ச்சி செய்தி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
உலகில் அமெரிக்காவிற்குப் பிறகு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக உள்ள இந்தியாவில் தினமும் பதிவாகும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 60,000க்கும் குறைவாக உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,75,880 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும் என மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், "அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசி கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் நிபுணர் குழுக்கள் ஏற்கனவே நாட்டில் தடுப்பூசிகளின் விநியோகத்தை எவ்வாறு வெளியிடுவது என்று திட்டமிட்டு அதற்கு தகுந்த திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்திய மக்களுக்காக கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப நாட்டில் பல கொரோனா தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.