"மூச்சு விட முடியல... என்ன காப்பாத்துங்க!".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்!.. வாசலிலேயே உயிர்பிரிந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jul 01, 2020 04:04 PM

பெங்களூருவில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு 50 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. முடிவில் அவர் ஆஸ்பத்திரி வாசலிலேயே உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

corona bengaluru business man denied admission in 50 hospitals

பெங்களூரு எஸ்.பி. ரோடு அருகே நகரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது நபர். தொழில் அதிபரான இவர் சொந்தமாக ஆஸ்டின் டவுன் பகுதிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த மாதம்(ஜூன்) 27-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் அதிகப்படியான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார்.

இதையடுத்து அவரை, அவருடைய உறவினர் ஒருவர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், படுக்கை காலியாக இல்லை என்றும், அதனால் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறும் கூறிவிட்டனர். அதையடுத்து அந்த நபரை, அவருடைய உறவினர் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கும், அந்த நபரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு வேறொரு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இவ்வாறாக கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் தொடர்ந்து 50 தனியார் மருத்துவமனைகளுக்கு அந்த நபரை அவருடைய உறவினர் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றார். இதில் 18 மருத்துவமனைகளில் அந்த நபருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு திருப்பி அனுப்பினர். 32 மருத்துவமனைகளில் படுக்கை காலியாக இல்லை என்று கூறி திருப்பி அனுப்பினர்.

மேலும் பவுரிங் மற்றும் லேடி கர்ஷன் மருத்துவமனையிலும் அவரை அனுமதிக்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர். கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையின் அடிப்படையிலேயே அவரை அனுமதிப்போம் என்று அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 28-ந் தேதி அன்று காலையில் அந்த நபரை அவருடைய உறவினர் ராஜாஜிநகரில் உள்ள ஒரு ரத்த பரிசோதனை ஆய்வகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டரும் பொருத்தப்பட்டது. பின்னர் அன்று இரவு அந்த நபரின் பரிசோதனை அறிக்கையை அவருடைய உறவினர் ஆய்வகத்தில் இருந்து பெற்றுள்ளார். அதையடுத்து அவர், அந்த நபரை மீண்டும் பவுரிங் மற்றும் லேடி கர்ஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் அந்த நபரின் ரத்த பரிசோதனை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அதை பார்த்து ஆய்வு செய்த டாக்டர்கள் அந்த நபரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்பத்திரி வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.

அந்த நபரின் உடல் தற்போது பவுரிங் மற்றும் லேடி கர்ஷன் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலில் இருந்து முடி மற்றும் சில உடல் பாகங்களை மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். அதன் அறிக்கை இன்னும் டாக்டர்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இறப்பதற்கு முன் அந்த நபர், தனது உறவுக்கார வாலிபரிடம், "என்னால் இதற்கு மேல் முடியவில்லை. என்னை ஆஸ்பத்திரியில் அனுமதியுங்கள் அல்லது என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னால் சுவாசிக்கவே முடியவில்லை" என்று கூறியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பெங்களூரு மேயர் கவுதம் குமார், "இது வெட்கக்கேடான விஷயம். நாம் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தி உத்தரவிட்டுள்ளேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நான் உதவி செய்ய முடியாதவனாக நிற்கிறேன்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Corona bengaluru business man denied admission in 50 hospitals | India News.