அரசு வேலைக்கும் ஆப்பு வச்சுட்டாங்களா!?.. 85 ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக அறிவிப்பு!.. இன்னும் அதிகமாகுமாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியா"பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எல்லோருமே தேசத்துரோகிகள். அவர்கள் அனைவரையும் வேலையை விட்டே தூக்க வேண்டும். அந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது உறுதி" என்று கடுமையாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் கர்நாடக மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த குமார் ஹெக்டா.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில், பாஜக கட்சி நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் நாடாளுமன்ற உறுப்பினர், அனந்தகுமார் ஹெக்டா.
அப்போது அவர் பேசியாவதாவது, "உத்தர கன்னடாவில் மட்டுமல்ல; பெங்களூரு மற்றும் டெல்லி வீடுகளில் கூட எனக்கு எப்போதும் பிஎஸ்என்எல் நெவொர்க் கிடைப்பதில்லை. நாட்டின் களங்கமாக இந்த நிறுவனம் உள்ளது. இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர உள்ளோம். பாஜக அரசினால் கூட பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள சிக்கலைத் தீர்க்க முடியவில்லை. தேசத் துரோகிகளின் கூடாரமாக பிஎஸ்என்எல் மாறிவிட்டது.
இதைக் கார்வார் நகரில் நடந்த கூட்டத்திலும் தெளிவாக எடுத்துரைத்தேன். அரசாங்கம் உரிய நிதி ஒதுக்கியுள்ளது. மக்களிடம் தேவை இருக்கிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தும் பிஎஸ்என்எல்லில் இருப்பவர்கள் வேலை செய்வதில்லை. அதனால் தான் பிஎஸ்என்எல்லில் பணிபுரியும் 85,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவுள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் மயமாக்கப்படுவது உறுதி" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.