டிராக்டரில் வந்திறங்கிய கல்யாண ஜோடி.. மணப்பெண்ணோட பெயரை கவனிச்சீங்களா.. ஆனந்த் மஹிந்திரா போட்ட சூப்பர் ட்வீட்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளையுடன் மணப்பெண் டிராக்டரில் திருமணத்திற்கு வந்திறங்கிய நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
டிராக்டரில் வந்த மணமக்கள்
மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாரதி கார்கே (Bharti Targe). பொறியாளரான இவருக்கும் வாசு கவாத்கார் என்பவருக்கும் கடந்த 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு மணமக்கள் ஊர்வலமாக வந்தனர். வழக்கமாக அலங்கரிக்கப்பட்ட காரில் மணமக்கள் ஊர்வலம் சென்று பார்த்திருப்போம். இங்கே பாரதி மற்றும் வாசு ஆகிய இருவரும் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்வராஜ் மாடல் டிராக்டரில் ஊர்வலமாக சென்றனர்.
திருமணம் நடைபெறும் இடத்திற்கு பாரதி டிராக்டரை ஓட்டிவர, மாப்பிள்ளை வாசு அதில் அமர்ந்திருக்கிறார். இதனை கண்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது.
ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்
இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"பாரதி என்னும் பெயர்கொண்ட மணமகள் ஸ்வராஜ்-ஐ (மஹிந்திரா ரைஸ் பிராண்ட்) ஓட்டுகிறார். அர்த்தப் பூர்வமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்தன்று மணமக்கள் டிராக்டரை ஓட்டிவந்த நிகழ்வு வைரலாக பேசப்பட்டுவந்த நிலையில், ஆனந்த் மஹிந்திரா மணப்பெண்ணின் பெயரையும் டிராக்டர் மாடலையும் ஒப்பிட்டு ட்வீட் செய்திருப்பது பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.