அமெரிக்காவுல மகனோட திருமணம்.. இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் நேரலை.. உறவினர்களை திக்குமுக்காட வைத்த பெற்றோர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தை இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள் ஆந்திராவை சேர்ந்த தம்பதியர். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பர்வத ரெட்டி - ஜோதி தம்பதியினரின் மகன் ரோஹித் ரெட்டி. 23 வயதான இவருக்கும் திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டையைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி சுனிதா தம்பதியினரின் மகள் ரிஷிதா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ரோஹித் அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். சுனிதாவும் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்பிஏ படித்துவருகிறார். இருவரும் காதலித்துவந்த நிலையில் இருவரது பெற்றோரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
விசாவில் வந்த சிக்கல்
இந்நிலையில், ரோஹித் - சுனிதாவுக்கு திருமணம் செய்துவைக்க இருவீட்டாரும் முடிவுசெய்தனர். அதன்படி அமெரிக்க நேரப்படி மே 21 ஆம் தேதி (இந்திய நேரப்படி மே 22 ஆம் தேதி) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுவந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் திருமணத்திற்கு செல்ல ரோஹித் - சுனிதாவின் பெற்றோருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால் இருவீட்டாரும் சோகமடைந்தனர்.
இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டர்
திருமணத்தை காண அமெரிக்கா செல்ல முடியாத சூழ்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டராக கருதப்படும் வி செல்லுலாயிட் நிறுவனத்தின் வி ஏபிக் திரையரங்கத்தில் திருமண நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர் மணமக்களின் பெற்றோர். இதனைத் தொடர்ந்து தியேட்டரில் மாலை, தோரணங்கள் என அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் மங்கள வாத்தியம் முழங்க ரோஹித் - சுனிதா திருமணம் நடைபெற, அவர்களது உறவினர் அனைவரும் அந்த காட்சியை நேரலையில் பார்த்து மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தில் நேரில் கலந்துகொண்ட உணர்வு கிடைத்ததாக இந்த தியேட்டருக்கு வந்த மணமக்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தை காண செல்ல முடியாத சூழ்நிலையில், மணமக்களின் பெற்றோர் இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டரில் நேரலையாக திருமணத்தை ஒளிபரப்பிய சம்பவம் பலரையும் வியப்படைய செய்துள்ளது.