"1 கிலோ கொறச்சா 1000 கோடி ஒதுக்குறேன்னு சொன்னாங்க.. இப்போ நான் தான் மிகவும் பணக்கார அமைச்சர்".. சொன்னதை செஞ்சு காட்டிய MP..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது தொகுதிக்கு 15,000 கோடி ருபாய் நிதி ஒதுக்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அதுவும் அவரது எடையை குறைத்ததால் இவ்வளவு தொகையை கேட்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் தொகுதி அமைச்சர் அனில் ஃபிரோசியா. இவரது தொகுதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க, நிதின் கட்காரி சென்றிருந்தார். அப்போது கூட்டத்தில் பேசிய கட்காரி, அனில் தனது எடையில் இருந்து குறைக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும் உஜ்ஜைன் தொகுதி மேம்பாட்டிற்காக 1000 கிலோ ஒதுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
மேலும் அனிலிடம் கட்காரி ," நான் உங்களைவிட பருமனாக இருந்தேன். 135 கிலோ எடை இருந்த நான் அதன்பிறகு உடற்பயிற்சி செய்து எடையை குறைத்தேன். தற்போது 93 கிலோ இருக்கிறேன். பலருக்கும் இது ஆச்சர்யமாக இருக்கிறது. ஆகவே, நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் உங்களது தொகுதிக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்குகிறேன். அது எப்படி என்று உங்களுக்கு சொல்லித் தருகிறேன். எடையை குறைத்துவிடுங்கள்" என்றார்.
விடா முயற்சி
அதன்பிறகு தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டுவந்த அமைச்சர் அனில், அதன் பலனாக 15 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இதனிடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனில், தான் 15 கிலோ எடையை குறைத்திருப்பதாகவும் ஆகவே, உஜ்ஜைன் தொகுதிக்கு 15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்
இதுபற்றி அவர் பேசுகையில்,"இப்போது உலகத்திலேயே பணக்கார அமைச்சர் நான் தான். ஏனென்றால் கட்காரி அவர்கள் என்னிடம் ஒவ்வொரு கிலோ குறைப்பதற்கும் 1000 கோடி நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருந்தார்" என்றார்.
சொன்னதை செய்வேன்
மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதின் கட்காரி ஆகியோர் சொல்லும் அறிவுகளை உடனடியாக தான் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அப்போது,"தற்போது நான் 15 கிலோ எடையை குறைத்திருக்கிறேன். இதன்மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரின் ஆசி இந்த உஜ்ஜைன் தொகுதி மேம்பாட்டுக்கு வேண்டும்" என்றார். இந்த சுவாரஸ்ய நிகழ்வு இந்தியா முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.