இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி.. பெங்களூரில் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Apr 25, 2019 07:03 PM
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து, பெங்களூரில் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிறு ஈஸ்டர் தினத்தன்று, பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் 359 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் முதல் வெளிநாட்டவர்கள் வரை பல பேர் குண்டுவெடிப்பில் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இலங்கையில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூர் நகரம் மற்றும் பெங்களூர் சர்வதேச விமானநிலையம் ஆகியவற்றிற்கு உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் போலீஸ் கமிஷனர் டி. சுனில் குமார் தலைமையில், பிரபல ஹோட்டல்கள், மால் உரிமையாளர்கள், ஆகியோருடன் மாலை 4 மணியளவில் கூட்டம் நடைபெற்றது.
அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எல்லா இடங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போலீஸ் கமிஷன்ர் சார்பில் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பெங்களூர் விமான நிலையத்துக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
