சென்னை விமான நிலையத்தில் ரெட் அலர்ட் பாதுகாப்பு..விசிட்டர்களுக்கு தடை.. ஏன்?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 03, 2019 01:48 PM
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் முரண்கள் எழுந்தன. இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறியதாக பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியதோடு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன் பிறகு பாகிஸ்தானில் சிக்கிக்கொண்ட அபினந்தன் நிபந்தனைகளின்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஒப்புதலுக்கிணங்க நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் அவர் விமானத்தை இயக்குவதற்கு உடல்தகுதி உள்ளவரா என்கிற மருத்துவ சோதனைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக சென்னை உட்பட நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் 7 அடுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய்களைக் கொண்டு சோதனை செய்வதோடு, பயணிகளும் தீர சோதனைக்குட்படுத்தப் படுகின்றனர்.
இதனால் அடுத்த அறிவிப்பு வரும்வரை, விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது உண்மை என்றும் இதனால் இந்தியாவுக்கு எதிரான ஜிகாத்தை தாங்கள் தொடங்கிவிட்டதாகவும் அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் சகோதரர் மவுலானா அமர் பேசியதாக வெளியான ஆடியோதான் இந்த அச்சுறுத்தல் உண்டானதற்கு காரணம் எனவும் அதனால் இந்த பலத்த பாதுகாப்பு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.