பகல்-ல தூய்மைப்பணி.. நைட்ல படிப்பு.. 50 வயசுல 10-வது தேர்வுக்கு சென்ற பணியாளர்.. கல்விக்கு வயசு தடை இல்ல சார்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது 50 வயதில் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி தேர்ச்சியடைந்திருக்கிறார். இதனால் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தினை சேர்ந்தவர் குஞ்சிகோர்வே மச்சான்னா ராமப்பா. 50 வயதாகும் ராமப்பா கடந்த 20 வருடங்களாக பிரஹன்மும்பை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் இந்த வருடம் மகாராஷ்டிரா மாநில 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வில் முதன் முதலாக கலந்துகொண்ட இவர் 57 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்கிறார்.
பகலில் வேலை இரவில் படிப்பு
தாராவியில் உள்ள யுனிவர்சல் நைட் ஸ்கூலில் 8 ஆம் வகுப்பில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் சேர்ந்த ராமப்பா, தினந்தோறும் மாலை நேரங்களில் கல்வி பயின்று வந்திருக்கிறார். காலையில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் இவர், இரவு 7 மணி முதல் 8.30 மணிவரையில் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பாடங்களை படித்திருக்கிறார். அதன் பலனாக 8 வது தேர்ச்சி பெற்ற ராமப்பா, அடுத்த முயற்சியாக 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும் என நினைத்திருக்கிறார்.
இவரது கனவிற்கு குடும்பத்தினரும், நண்பர்களும் ஆதரவு அளிக்கவே, உத்வேகத்துடன் படித்துவந்த ராமப்பா தற்போது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்று அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார். நடந்து முடிந்த தேர்வில் மராத்தியில் 54, இந்தியில் 57ஆங்கிலத்தில் 54 கணிதத்தில் 52, அறிவியலில் 53, சமூக அறிவியலில் 59 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார் ராமப்பா.
குடும்ப சூழ்நிலை
சிறுவயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, தன்னால் பள்ளி கல்வியை தொடர முடியாமல் போனதாக சோகத்துடன் குறிப்பிடும் ராமப்பா,"நான் படிக்க போகிறேன் என்று எனது குடும்பத்தினருடன் சொன்னபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும், நான் படிப்பில் தொடர்ந்து ஈடுபட உத்வேகம் அளித்து என்னை தேர்ச்சி பெறவும் வைத்திருக்கிறார்கள். சிறுவயதில் படிக்க முடியாமல் போனதை எண்ணி பல நாள் கவலைப்பட்டிருக்கிறேன். கல்வி கற்பதற்கு வயது தடை இல்லை என்பதை புரிந்துகொண்ட பின்னர் கனவுகளை துரத்த துவங்கினேன்" என்றார்.
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து, மேலும், படிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார் ராமப்பா. மகாராஷ்டிராவில் 50 வயதில் தூய்மை பணியாளர் ஒருவர் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Also Read | Push Up-ல் புதிய உலக சாதனை.. யம்மாடி ஒரு மணி நேரத்துல இவ்வளவா? கின்னஸ் சாதனை படைத்த வீரர்..!

மற்ற செய்திகள்
