'அம்மாவோட மருத்துவ செலவுக்காக...' கொரோனாவால இறந்து போனவங்க உடல்களை தகனம் செய்யும் மாணவன்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தன் தாயின் மருத்துவ செலவிற்காக கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலத்தை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெல்லியில் சீலாம்பூரில் 12ம் வகுப்பு படித்து வரும் சந்த் முகமது என்னும் மாணவன் தன் குடும்ப வறுமையின் காரணமாகவும், தாயின் மருத்துவ செலவிற்காகவும், பள்ளிக் கட்டணத்திற்காகவும் தன் உயிரை பணையம் வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் என சொன்னால் அது மிகையாகாது.
கொரோனா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் தான். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சந்த் முகமதுவின் அண்ணனுக்கு வேலை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு பள்ளிகளில் படிக்கும் வயதுடைய 3 சகோதரிகள் உள்ளனர்.
சந்த் முகமதுவின் அம்மாவிற்கு தைராய்டு பாதிப்பு இருப்பதால், மருத்துவ செலவிற்காகவும், தான் உட்பட 4 பேருக்கும் பள்ளி கட்டணம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. பணிக்கு சென்ற அண்ணனுக்கும் வேலையில்லாததால் சந்த் முகமது டெல்லியிலுள்ள லோக் நாயக் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக சேர்ந்துள்ளார்.
தற்போது சந்த் முகமது கொரோனா பாதிப்பில் உயிரிழந்த உடல்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து கூறிய சந்த் முகமது, 'பள்ளிக் கட்டணத்திற்கு கடன் வாங்க முயன்றேன் ஆனால் இப்போதைய சூழலுக்கு யாரும் கடன் தர முன்வர வில்லை. அதனால் உலகமே கொரோனோவால் ஆட்டம் கண்டுள்ள இந்த சூழலில் நான் மிக ஆபத்து நிறைந்த பணியில் எனக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.17 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. என் பணியை மேலும் தொடர்ந்து செய்வேன். எனக்கு வரும் சம்பளம் மூலம் எங்களின் 4 பேரின் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியும். என் அம்மாவின் மருத்துவ செலவிற்கும் உதவியாக இருக்கும்' எனக் கூறினார்.